“அப்பா, மகன் அரசியல் .. பேரன் விளையாட்டு” -ஆல் ஏரியாவில் கலக்கும் மு.க.ஸ்டாலின் குடும்பம்
நடிகரும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பன் உதயநிதி கால்பந்து அணி ஒன்றில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரனும்,சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பன் உதயநிதி அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் தனது அப்பாவுடன் தோன்றுவது வழக்கம். தாத்தா, பெரியப்பா, அப்பா, அத்தை என அனைவரும் அரசியல் ஆளுமைகளாக வலம் வர இன்பன் சென்னையிலுள்ள மேக்ஸ் கால்பந்து அகாடமியில் இன்பன் பயிற்சி பெற்று வருகிறார்.
டிபெண்டர் ரோலில் பயிற்சி செய்து வரும் அவரை ஐ லீக் தொடருக்காக நேரடியாக ஒரு அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியளவில் பிரபலமான ஐ லீக் தொடர் 2007ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.
இதில் 21 கிளப் பணிகள் கலந்துகொள்வது வழக்கம். இந்தாண்டுக்கான தொடர் ஆரம்பமாக உள்ள நிலையில் புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்யும் பணிகளில் கிளப் அணிகள் நிர்வாகங்கள் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில் நெரோகா எஃப்சி அணி இன்பன் உதயநிதியை ஒப்பந்தம் செய்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை தன்னுடைய அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் நெரோகா அணி பதிவிட்டுள்ளது. இந்த கிளப்பின் தலைமையிடம் மணிப்பூர் மாநிலத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து இன்பன் உதயநிதிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.