தமிழக உரிமையை அடகு வைத்துள்ள முதல்வர் விஜய் - உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

Udhayanidhi Stalin Vijay Karnataka
By Karthikraja Jul 28, 2026 09:25 AM GMT
Report

தமிழக உரிமையை முதல்வர் விஜய் அடகு வைத்துள்ளதாக உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேகதாது அணை விவகாரம்

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதில் கர்நாடகா அரசு முயற்சி எடுத்து வரும் நிலையில், அதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இது குறித்து கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாருடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாடு முதல்வர் விஜய் ஆகஸ்ட் 3 ஆம் தேதி கர்நாடக செல்ல உள்ளதாக வேளாண்துறை அமைச்சர் வினோத் தெரிவித்திருந்தார். 

தமிழக உரிமையை அடகு வைத்துள்ள முதல்வர் விஜய் - உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு | Udhayanidhi Stalin Slams Cm Vijay For Mekedatu

இந்நிலையில், மேகதாது அணை தொடர்பாக அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தமிழ்நாட்டின் ஒப்புதலை பெற தேவை இல்லை என தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டுமென முதல்வர் விஜய் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக உரிமையை அடகு வைத்துள்ள முதல்வர்

இந்நிலையில், ஆட்சியை காப்பாற்ற தமிழக உரிமையை முதல்வர் விஜய் அடகு வைத்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி கர்நாடகாவிற்குத் தேவை இல்லை என்ற ஒன்றிய இணை அமைச்சரின் பதில் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. 

தமிழக உரிமையை அடகு வைத்துள்ள முதல்வர் விஜய் - உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு | Udhayanidhi Stalin Slams Cm Vijay For Mekedatu

டெல்லி எஜமானர்களை பகைத்துக் கொள்ளாமலும் ஆட்சிக்கட்டிலைக் காப்பாற்ற காங்கிரஸுக்கு எதிராக பேசாமலும், தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்துள்ளார் முதலமைச்சர்.

இந்த பிரச்சினையில், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் ஓரணியில் சென்று ஒன்றிய அரசிடம் மேகதாதுவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமென சட்டப்பேரவையில் பேசி இருந்தேன்.

கர்நாடகாவில் பட வசூல் பாதிக்கும் என்ற பயத்தில், இந்த SofaModel முதலமைச்சர், எதிர்க்கட்சிகள் சொன்னதையும் கேட்கவில்லை - விவசாயிகளின் கோரிக்கையையும் ஏற்கவில்லை. 

இனியும் காலம் தாழ்த்தினால் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோகும். எனவே, மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை முறியடிக்க முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.