கூட்டணியில் விரிசல் விழாதா என 2 கட்சிகளும் காத்திருக்கின்றன - உதயநிதி ஸ்டாலின்
திமுகவை அழிப்பேன் என பலர் கிளம்பியிருக்கின்றனர் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
தஞ்சாவூர் வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பல்வேறு அரசு விழா மற்றும் கட்சி நிகழ்வுகளில் கலந்து கொண்டார். அதன் பின் இன்று திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவை நடத்தி வைத்தார்.
நிகழ்வில் பேசிய அவர், "நான் துணை முதல்-அமைச்சராக வரவேண்டும் என்ற முதல் குரல் தஞ்சை மாவட்டத்தில் இருந்துதான் வந்தது. அதன் பிறகு நான் துணை முதல்-அமைச்சராக நியமிக்கப்பட்டேன்.
திராவிட மாடல் ஆட்சி
இந்திய ஒன்றியத்திலேயே தமிழ்நாட்டில் நடக்கும் திராவிட மாடல் ஆட்சி தான் சிறப்பான ஆட்சி என பலரும் கூறுகிறார்கள். திராவிட மாடல் ஆட்சியை பின்பற்றி தான் பல மாநிலங்கள் ஆட்சி நடத்தி வருகிறது.
இன்றைக்கு திமுகவை அழிப்பேன் என்று பல பேர் கிளம்பியிருக்கின்றனர். இதற்கெல்லாம் நாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. தமிழ்நாட்டு மக்கள் அதற்கு சரியான பதிலடியை கொடுப்பார்கள். நாம் அடைகின்ற தொடர் வெற்றி தான் அவர்களுக்கு மிகப்பெரிய எரிச்சலை தருகிறது.
கூட்டணியில் விரிசல்
பல அணிகளாக பிரிந்து கிடக்கும் அ.தி.மு.கவும், யாருமே சீண்டாத பா.ஜ.கவும் எப்படியாவது தி.மு.க கூட்டணியில் விரிசல் விழாதா என துண்டு போட்டு காத்திருக்கின்றனர். நம் கூட்டணி வலுவாக உள்ளது என அவர்களுக்கு முதல்வர் பதில் கூறிவிட்டார்.
நமது கூட்டணி கட்சி தலைவர்களும் தி.மு.க கூட்டணியில்தான் தொடர்வோம் என உறுதி நிலையில் உள்ளனர். 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 க்கும் அதிகமான தொகுதிகளை வெல்ல வேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளார். அதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைந்து 2 வது முறையாக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் ஆனார், 7-வது முறையாக திமுக ஆட்சி அமைத்தது என்ற வரலாற்றை உருவாக்குவோம்" என பேசினார்.