செங்கலைக் காட்டி மோடியைக் கலாய்த்த உதயநிதி ஸ்டாலின்

modi bjp stalin udhayanidhi
By Jon Mar 23, 2021 07:37 PM GMT
Report

துரையில் மோடி கட்டிய எய்ம்ஸ் மருத்துவமனை இது தான் என செங்கலை எடுத்துக் காட்டி உதயநிதி ஸ்டாலின் கலாய்துள்ளார். தமிழகத்தில் வரும் 6ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் பிரச்சாரம் அனல் பறந்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, திமுக வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திமுகவின் தேர்தல் அறிக்கை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து, கருத்துக் கணிப்புகளும் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக சொல்கின்றன. இந்த நிலையில் திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலின் விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

சாத்தூரில் அவர் திமுக கூட்டணி வேட்பாளர் ரகுராமனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட போது, மதுரையில் பிரதமர் மோடி கட்டிய எய்ம்ஸ் மருத்துவமனை இது தான். அதை கையோடு கொண்டு வந்திருக்கிறேன் என ஒரு செங்கலைக் காட்டி கிண்டலித்தார். உடனே அங்கு கூடியிருந்த மக்கள் எல்லாரும் கைகொட்டி சிரித்தார்கள்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கூறி 6 ஆண்டுகள் ஆகி விட்டது. இப்போது கட்டப்படும்,நாளைக்கு கட்டப்படும் என போக்கு காட்டிக் கொண்டிருக்கிறது பாஜக அரசு. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டும் கூட இப்போது வரையில் கட்டுமான பணி நடைபெறவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பாஜக அரசின் மீது கடுப்பில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.