தமிழக அமைச்சராகும் உதயநிதி ஸ்டாலின்? - ஆதரவு தெரிவித்த முக்கிய திமுக புள்ளி
திமுக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று முதல்முறையாக முதல்வர் பதவி ஏற்ற மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் திமுக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடக்கவில்லை.
அதேசமயம் முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினர்களான கயல்விழி செல்வராஜ், மதிவேந்தன் போன்றோருக்கு எல்லாம் அமைச்சரவையில் வாய்ப்பு தந்த ஸ்டாலின் தனது மகனுக்கு இடம் கொடுக்கவில்லை.
இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக தொகுதிப் பணிகளில் ஆர்வமுடன் களமிறங்கி செயலாற்றி வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவை மாற்றத்தில் வாய்ப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்ற தனது விருப்பத்தை பதிவு செய்துள்ளார். உதயநிதி அமைச்சராக வேண்டும் என்பது தனது விருப்பம் மட்டுமல்ல மக்களின் விருப்பமும் அதுதான் என தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலினிடம் உள்ள திறமை குறிப்பிட்ட ஒரு தொகுதிக்குள் மட்டும் சுருங்கிவிடக் கூடாது என்றும் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் அவரிடம் உள்ள திறமைகள் பயன்பட வேண்டும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருக்கிறார். ஒரு எம்.எல்.ஏ.வாக உதயநிதியின் செயல்பாடுகள் ஸ்டாலினின் பாராட்டை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
உதயநிதி அமைச்சராக வேண்டும் என திமுகவில் எழுந்துள்ள முதல் குரல் அமைச்சர் அன்பில் மகேஷிடம் இருந்து வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் விரைவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர் படுகொலை - காவல்துறையினரால் சுட்டு கொல்லப்பட்ட துப்பாக்கிதாரிகள் : மறைக்கப்படும் உண்மைகள் IBC Tamil
