துணை பொதுச்செயலாளராகிறாரா உதயநிதி - மதுரை பொதுக்குழு கூட்டத்தில் அறிவிப்பு?
உதயநிதி ஸ்டாலின் திமுக துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
உதயநிதி ஸ்டாலின்
அண்மையில், அமைச்சர் பொன்முடி விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், பெண்கள், சைவம், வைணவத்தைப் பற்றி கொச்சயாக பேசியிருந்தார்.
தொடர்ந்து வீடியோ வைரலாக, திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்ட பலர் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தனர். உடனே, அவரிடம் இருந்த திமுகவின் துணை பொதுச்செயலாளர் என்னும் பதவி பறிக்கப்பட்டது. இவருக்கு பதிலாக, அந்தப் பதவியில் திருச்சி சிவா நியமிக்கப்பட்டார்.
துணை பொதுச்செயலாளர்?
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் திமுக துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு திமுக பொதுக்குழு நடந்த போதே கனிமொழியை துணைப் பொதுச்செயலாளராக்க வேண்டுமென்ற கோரிக்கை வந்தது.
அப்போது நான் தலைவர், ஸ்டாலின் பொருளாளர் ஏற்கனவே நாங்கள் இருவரும் மேடையில் இருப்போம். கனிமொழியும் துணைப் பொதுச்செயலாளராகி ஒரே குடும்பத்தில் மூவர் மேடையில் அமர்வது நன்றாக இருக்காது என அதனை கலைஞர் மறுத்ததாக தகவல்கள் வெளியாகின.
தற்போது உதயநிதிக்கு தலைமைக் கழக பொறுப்பு கொடுக்கப்பட்டால், ஒரே குடும்பத்தில் மூவர் மேடையில் அமரும் சூழல் வரும் என்பது குறிப்பிடத்தக்கது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின், திமுக இளைஞரணி செயலாளர் பதவி தூத்துக்குடி ஜோயலுக்கு வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.