ஊர் சுத்தி பார்க்கவா வந்தேன்..? தூத்துக்குடியில் திடீரென ஆவேசமான உதயநிதி..!!
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அரசின் நடவடிக்கைகளை விமர்சித்திருந்த நிலையில், அதற்கு அமைச்சர் உதயநிதி பதிலடி கொடுத்துள்ளார்.
மழை வெள்ள பாதிப்பு
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பெய்த தொடர் கனமழை கடும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ள நிலையில், அரசு மீட்புப்பணிகளை துரிதப்படுத்தியுள்ளது.
நீர் வரத்து அதிகமாக இருப்பதால், மணிமுத்தாறு அருவி வழியாக மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 30 ஆயிரம் கன அடிக்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்து வருகின்றது. வெள்ள நீர் ஊருக்குள் புகுந்துள்ளதால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
உதயநிதி ஆய்வு
இந்நிலையில், பாதிப்படைந்துள்ள இடங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு நிவாரண பணிகளை முடிவிட்டுள்ளார். இந்த நிலையில், நேற்று நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நிவாரண பணிகள் சரிவர நடைபெறவில்லை அரசு மீது விமர்சனம் வைத்திருந்தார். இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர். இப்போ என்ன பண்ணிட்டு இருக்கிறோம் , ஊர்சுத்தி பார்க்க வந்து இருக்கிறோமா, எல்லா இடத்திலும் எங்களால் முடிந்த அளவுக்கு களத்தில் இறங்கி மீட்பு பணிகளை செய்து வருகிறோம் என்று ஆவேசமாக பதிலளித்தார்.
அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் களத்தில் இறங்கி வேலை பார்த்து வருகிறோம் என்று கூறி, இது இயற்கை பேரிடர் என்றும் எதிர்பார்த்ததை விட அதிக மழை பெய்துள்ளது என்று சுட்டிக்காட்டி பல வருடங்களுக்கு பிறகு இப்படி ஒரு மழை பெய்துள்ளது என்று தெரிவித்து, களத்தில் இறங்கி எங்களால் முடிந்த அளவு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.