அரசு பங்களாவில் குடியேறும் உதயநிதி - மும்முரமாக புதுப்பிக்கும் பணி!
அமைச்சர் உதயநிதி அரசு பாங்களாவில் குடியேற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாதுகாப்பு பிரச்னை
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை ஆழ்வார்பேட்டையில் தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். அங்கு தான் முதலமைச்சர் முகாமும் செயல்படுகிறது. அதனால், அவரை சந்திக்க அதிகாரிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் வந்து செல்கின்றனர்.
அதேபோல், அமைச்சர் உதயநிதியை பார்க்கவும் அவரது துறை சார்ந்த அதிகாரிகள் வந்து செல்கின்றனர். இதனால், அங்கு நெருக்கடியும், பாதுகாப்பு பிரச்னையும் ஏற்பட்டுள்ளது. எனவே, உதயநிதி அரசு பங்களாவில் குடியேற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அரசு பங்களா
தொடர்ந்து, அவருக்காக 'குறிஞ்சி' என்ற அரசு பங்களா, தீவிரமாக புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதில், சபாநாயகர் அப்பாவு வசித்து வந்தார். கடந்த ஜனவரியில் அவர், அருகில் உள்ள 'மலரகம்' என்ற பங்களாவுக்கு மாற்றப்பட்டார்.
முன்னதாக, துணை முதலமைச்சராக இருந்த போது ஸ்டாலின் இந்த பங்களாவில் தான் குடியிருந்தார். இந்நிலையில் அடுத்த மாதம் உதயநிதி குடியேற உள்ளார்.