நாம் பொங்கல் கொண்டாடக் கூடாது என திட்டமிட்டு செயல்படுகிறார்கள் - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
சட்டமன்றத்தில் ஆளுநர் வாக்கிங் செல்கிறார் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
சென்னை நந்தம்பாக்கத்தில் திமுக சார்பில் இன்று (13.01.2025) நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இதை தொடர்ந்து அந்த நிகழ்வில் பேசிய அவர், நமது பண்பாட்டை அழிக்க வேண்டும் என்ற நோக்குடன் ஒரு கூட்டம் செயல்பட்டு வருகிறது. அதுதான் சங்கி கூட்டம்.
ஆளுநர் வாக்கிங்
நாளை பொங்கல் தினத்தன்று ஒன்றிய அரசு தேர்வுகளை அறிவித்துள்ளது. வருடத்தில் 365 நாட்கள் இருந்தாலும், நாம் நாளை பொங்கலை கொண்டாடக் கூடாது என்று திட்டம் போட்டு செயல்படுகிறார்கள். அதற்கு நமது முதல்வர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இன்னொருவர் இருக்கிறார் மத்திய அரசின் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர். ஆளுநரின் வேலை என்ன அமைச்சரவை எழுதிக்கொடுப்பதை படித்து விட்டு போவதுதான். சட்டமன்ற வரலாற்றில் வாக்கிங் போகும் ஆளுநர் இவர் ஒருவர்தான்.
அதிமுக பாஜக கூட்டணி
கடந்த ஆண்டு தமிழ்நாடுனு பெயர் இருப்பது எனக்கு பிடிக்கல அதை மாற்றனும்னு பேசினார். அதற்கு ஒத்துமொத்த தமிழ்நாடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த தடவை தமிழ்தாய் வாழ்த்து படக்கூடாது தேசிய கீதம் மட்டும்தான் பாடனும்னு சொல்கிறார். சட்டசபை முடியும் போது தேசிய கீதம் பாடுவோம். தேசிய கீதம் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு எங்களுடைய தமிழ்த்தாய் வாழ்த்தும் முக்கியம்
இன்னொருவர் இருக்கிறார் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி. ஆளுநருக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருபவர். சமீபத்தில் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் வீட்டில் ரெய்டு நடத்தி சில கோடிகள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அதிமுக - பாஜக இடையே உறுதி செய்யப்படாத கூட்டணி தொடர்கிறது" என பேசினார்.