பெண்களுக்கு கொடுக்குறோம் சொன்ன ரூ.1000 எப்போ தருவீங்க? - உதயநிதி கூட்டத்தில் நிகழ்ந்த சம்பவம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலினிடம் பொதுமக்களில் ஒருவர் தேர்தல் வாக்குறுதி என்னாச்சு என கேட்டதால் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 12,838 பதவியிடங்களுக்கு வருகிற 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22 ஆம் தேதி நடக்கவுள்ளது.
இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில் திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் போட்டியிடும் திமுக உள்ளாட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
அப்போது திமுக ஆட்சிக்கு வந்த 8 மாதத்தில் 9 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு போட்டுள்ளோம்.கொரோனா 3ஆவது அலையை எந்த வித பிரச்சினையுமின்றி கடந்துவிட்டோம். ஒமிக்ரானையும் வென்றுவிட்டோம். இதற்கெல்லாம் காரணம் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிதான் என தெரிவித்தார்.
மேலும் பெண்களுக்கு இலவச பயணம் என அறிவித்தார், செய்தாரா இல்லையா, கொரோனா நிவாரணம் ரூ 4000 வழங்குவதாக கூறினார். அதையும் செய்துவிட்டார். ஆவின் பால் விலை குறைப்பு, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைப்பு என சொல்லியதை எல்லாம் செய்து முடித்திருக்கிறோம். வடஇந்தியாவில் பத்திரிகைகளில் தமிழகத்தின் முதல்வர்தான் முதன்மையானவர் என சர்வேயில் கூறுகிறார்கள் என உதயநிதி தெரிவிக்க அப்போது ஒரு குரல் கேட்டது.
கூட்டத்தில்,இருந்த ஒருவர் பெண்களுக்கு மாசம் ரூ 1000 தருவதாக சொன்னீங்களே அது என்னாச்சு என்றார். இதனை சற்றும் எதிர்பாராத உதயநிதி கொடுப்போம்.. இன்னும் 4 வருஷம் இருக்குல்ல என சமாளிக்க தொண்டர்கள் நிம்மதியடைந்தனர்.