வரலாற்றிலேயே இப்படி ஒரு டம்மி முதலமைச்சரை பார்த்தது கிடையாது - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
வரலாற்றிலேயே இப்படி ஒரு டம்மி முதலமைச்சரை பார்த்தது கிடையாது என உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
சென்னையில் நடைபெற்ற திமுக நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்த நிகழ்வில் பேசிய அவர், "நம்முடைய திராவிட முன்னேற்ற கழகம் இன்னும் 2 நாட்களில் முப்பெரும் விழாவை கொண்டாட இருக்கிறோம். 76வது ஆண்டை நிறைவு செய்து 77வது ஆண்டில் திராவிட முன்னேற்ற கழகம் அடியெடுத்து வைக்க இருக்கிறது.
இந்த 77 வருடங்களில் நமது இயக்கம் எத்தனையோ வெற்றிகளையும், தோல்விகளையும் பார்த்துள்ளது. தேர்தல் வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்டு எப்போதும் மக்களுடன் நிற்கும் இயக்கம் தான் நம்முடைய திராவிட முன்னேற்ற கழகம்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் சிறப்பான எதிர்கட்சியாக செயல்பட்டு வருகிறோம். ஒவ்வொரு நாளும் இங்குள்ள டம்மி ஆட்சியாளர்களால் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள்.
இந்த ஆட்சியில் தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் மின்வெட்டு, சட்ட ஒழுங்கு பற்றி நான் சொல்ல தேவையில்லை. இதை பற்றி கேள்வி கேட்டால் முதலமைச்சரால் பதில் சொல்ல முடியவில்லை.
அதனால் நமது கழகம் மேல, தலைவர் மேல அவதூறு கிளப்பிட்டு இருக்காங்க. தமிழ்நாட்டில் வரலாற்றிலேயே இப்படி ஒரு அநாகரீகமான, டம்மி முதலமைச்சரை பார்த்தது கிடையாது.
பல்வேறு வாக்குறுதிகளை சொல்லி ஆட்சிக்கு வந்தாங்க. ஆனால் 4 மாதத்தில் ஒரு வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை. நமது திராவிட மாடல் ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களின் பெயர்களை மாற்றி செயல்படுத்தி வருகிறார்கள்.
அடுத்த கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதன் காரணமாக 2 தொகுதிகளில் இடைத்தேர்தல் வருகிறது.
நமக்கு இடைத்தேர்தலில் கிடைக்கும் வெற்றி, இந்த ஆட்சிக்கு கிடைக்கும் வீழ்ச்சியின் தொடக்கமாக இருக்க வேண்டும். இந்த இடைத்தேர்தலில் நாம் அனைவரும் இணைந்து டம்மி முதலமைச்சருக்கு சரியான பாடத்தை புகட்ட வேண்டும்" என பேசியுள்ளார்.