கூவத்தூர் போய் திமுக ஆட்சியை பிடிக்கவில்லை - உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி போல் நாங்கள் ஆட்சியை பிடிக்கவில்லை என திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தின் ஆத்தூர், நரசிங்கபுரம் ஆகிய நகராட்சிகளின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஆத்தூர் ராணிப்பேட்டையில் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
கூட்டத்தில் பேசிய அவர், சேலம் மக்களை நம்ப முடியாது என்றும், கடந்த சட்டமன்ற தேர்தலில் சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதியில் திமுகவை வெற்றி பெற செய்யாமல் ஏமாற்றி விட்டதாக கூறினார். எனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலாவது வெற்றி பெற செய்யுங்கள் என்று பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.
மேலும் கடந்த இரண்டு நாட்களாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கலைந்து விடுமென கூறி வருகிறார். அவரைப் போல கூவத்தூர் போய் நாங்கள் ஆட்சியை பிடிக்கவில்லை. இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சி என உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் பேசினார்.