ஜோசியக்காரன் சொன்னால் தான் திறந்து பார்ப்பீர்களா? முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி
ஜோசியக்காரன் சொன்னால் தான் கோப்புகளை திறந்து பார்ப்பீர்களா என முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று நீதி, சிறை, சட்டம், எரிசக்தி, அறநிலையத்துறை ஆகிய துறைகளின் மீதான மானிய கோரிக்கை விவாதம் இன்று நடைபெற்று வருகிறது.
இதில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், "ஆளும்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் ஆதாரம் இல்லாமல் பல குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள். வரலாற்றில் இல்லாத வகையில் எதிர்க்கட்சியை உறுப்பினர்களை விட, ஆளும் கட்சி உறுப்பினர்கள், அமைச்சரின் பேச்சுக்களெல்லாம் அவைக்குறிப்பில் நீக்கப்படுகிறது.

எதிர்க்கட்சி ஒரு கேள்வி கேட்டால் அமைச்சர்கள் ஆச்சரியப்படும் வகையில் பதிலெல்லாம் கொடுக்கிறார்கள். இப்போது பாடலெல்லாம் பாடுகிறார்கள். இது சட்டப்பேரவையா? பாட்டு நிகழ்ச்சியா? என தெரியவில்லை.
சில தினங்களுக்கு முன் பேரவையில் பேசிய முதலமைச்சர், தனது டேபிளில் 3 கோப்புகள் இருப்பதாகவும், அதனை திறந்து பார்க்க வைத்துவிட வேண்டாம் என எதிர்க்கட்சிகளை நோக்கி குற்றம்சாட்டியுள்ளார்.
அந்த கோப்புகளை தயவு செய்து திறந்து பாருங்கள். அதன் மீது நடவடிக்கை எடுங்கள். எதற்காக பயப்படுகிறீர்கள். காலம் தாழ்த்துகிறீர்கள், இதையே 3 மாதமாக சொல்கிறீர்கள்.
ஜோசியக்காரர் சொன்னால்தான் அந்த கோப்புகளை திறப்பீர்களா? நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா?
முதலமைச்சருக்கு நான் Open Challenge வைக்கிறேன். அவர் வைத்திருக்கும் கோப்புகளில் தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும். சினிமா போல் சட்டப்பேரவையில் பஞ்ச் டயலாக் பேச வேண்டாம். உருட்டல், மிரட்டல்களுக்கெல்லாம் பயப்படும் இயக்கம் திமுக கிடையாது" என பேசியுள்ளார்.