இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அறிவிப்பு - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
எல்லார்க்கும் எல்லாம் என்பதுதான் திராவிட மாடல் அரசின் நோக்கம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில், ரூ.9.67 கோடி மதிப்பில் அமையவிருக்கும் சர்வதேச தரத்திலான ஹாக்கி விளையாட்டு மைதானத்திற்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அதைத்தொடர்ந்து பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணபதி ராஜ் குமார், கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திராவிட மாடல் அரசின் நோக்கம்
இதனையடுத்து, நிகழ்வில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "எல்லார்க்கும் எல்லாம் என்பதுதான் திராவிட மாடல் அரசின் நோக்கம். புதுமைப் பெண் திட்டம் மூலம் 3.5 லட்சம் மாணவிகளுக்கும், தமிழ்ப் புதல்வன் திட்டம் மூலம் 3.5 லட்சம் மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 கல்வி உதவித்தொகை கிடைக்கிறது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் திட்டம் நாட்டிற்கே முன்னோடியாக திகழ்கிறது.நம்முடைய முதலமைச்சர் அனைத்து தரப்பு மக்களையும் கவனத்தில் கொண்டு திட்டங்களை செயல்படுத்துவதால்தான், இன்றைக்கு இந்தியாவிலேயே 9.69% வளர்ச்சியோடு தமிழ்நாடு அனைத்து மாநிலங்களையும் விட முதலிடத்தில் உள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு
மகளிர் சுய உதவிக்குழுக்களில் உள்ள சகோதரிகளின் நலன்களை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு ரூ.37,000 கோடி அளவிற்கு வங்கிக்கடன் இணைப்புகளை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதை இந்த அரசு கடன்தொகையாக பார்க்கவில்லை. உங்கள் உழைப்பின் மீது வைத்திருக்கக்கூடிய நம்பிக்கைத் தொகையாகதான் நாங்கள் பார்க்கிறோம். மாற்றுத்திறனாளிகளுக்கு என்று நிறைய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறார்.
கடந்த வாரம் கூட இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் அறிவிக்காத, உள்ளாட்சி அமைப்புகளில் நியமன முறையில் மாற்றுத்திறனாளிகளை தேர்வு செய்வதற்கான சட்டமசோதாவை, சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்தார். இதன் மூலம் 15,000 மாற்றுத்திறனாளிகள் பயனடையவுள்ளனர்" என கூறினார்.