சட்டமன்றக் குழுத் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு - திமுக அறிவிப்பு
திமுக சட்டமன்றக் கட்சியின் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தி.மு.க சட்டமன்ற குழு துணைத் தலைவராக கே.என் நேரு, கொறடாவாக எ.வ வேலு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவையின் புதிய எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளார். தி.மு.க சட்டமன்ற குழுத் தலைவராக அவர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், தவெக தனி பெரும் கட்சியாக 108 இடங்களை வென்றிருந்தும் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாமல் இருந்தது.

இதன் காரணமாக திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவை தவெக கோரியது. இதனையடுத்து திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி காங்கிரஸ் முதல் கட்சியாக தவெகவுடன் கூட்டணி வைத்தது.
அதேசமயம், திமுக கூட்டணியில் இருக்கும் சிபிஐ, சிபிஎம், விசிக மற்றும் ஐ.யூ.எம்.எல். ஆகியவை வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்துள்ளன. இதன் மூலம், தவெகவுக்கு பெரும்பான்மை கிடைத்தது.
இதனையடுத்து இன்று காலை நேரு உள்விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தவெக தலைவர் விஜய்யை முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்துவைத்தார்.
இதற்கிடையில் கடந்த 7ஆம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இதில், கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸுக்கு கண்டனம், முடிவெடுக்கும் அதிகாரம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கே என்பன உட்பட நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழக முதல்வராக சி. ஜோசப் விஜய் இன்று (மே 10) பதவியேற்றுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் செயல்பட உள்ளார். தமிழக அரசியலில் நீண்ட காலத்திற்குப் பின்னரை் ஒரு புதிய அரசியல் சூழல் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.