உதயநிதி சனாதன பேச்சு....தலைவர்களின் ஆதரவும், எதிர்ப்பும்..!!
தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்தான பேச்சுக்கள் அரசியல் களத்தில் விவாத பொருளாக மாறியுள்ள நிலையில், அதில் தலைவர்களின் கருத்துக்களை காணலாம்.
அமைச்சர் உதயநிதி கருத்து
சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா போன்ற சனாதனத்தை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியது என பேசியிருந்தார்.
மத்திய அமைச்சர் அமித் ஷா
இந்த கருத்துக்கள் பெரும் சலசலப்புகளை தேசிய அரசியல் வரை எதிரொலித்துள்ளது. குறிப்பாக இது குறித்து பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா, இதுபோன்ற பேச்சுகள், இந்து மதத்தையும், கலாச்சாரத்தையும் "இந்தியா" கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் வெறுக்கின்றனர் என்பதை தெளிவாக்குகிறது என தெரிவித்தார்.
மேலும், அவர்களுடைய பேச்சு இந்து மதத்தின் மீதும் நமது கலாச்சாரத்தின் மீதும் நடத்தப்படும் தாக்குதலாகும் என கடுமையாக சாடிய அமித் ஷா, உதயநிதியின் பேச்சு வாக்கு வங்கிக்காக நடத்தப்படுகிறது என்று தெரிவித்திருந்தார்.
காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் கே சி வேணுகோபால்
சனாதனம் பற்றிய உதயநிதியின் விமர்சனத்திற்கு இந்தியா கூட்டணி அமைத்து காப்பது ஏன் என்ற கேள்விக்கு செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் பதிலளித்துள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் கூறும் போது, சமதர்ம சமுதாயம் வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்றும், கருத்து சொல்ல ஒவ்வொரு கட்சிக்கும் சுதந்திரம் உண்டு என குறிப்பிட்டு, அனைவரது நம்பிக்கையையும் மதிக்கிறோம் என தெரிவித்திருக்கிறார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறும் போது, உதயநிதி சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசியது நாட்டின் 142 கோடி மக்களாலும் கண்டிக்கப்பட வேண்டிய விஷயம் என குற்றம்சாட்டி, ஒரு குறிப்பிட்ட மதத்தின் மீதான வெறுப்பை அவர் காட்டி உள்ளார் என தெரிவித்தார்.
மேலும், உதயநிதி ஒரு உரையைப் படித்துக்கொண்டிருந்தார் என சுட்டிக்காட்டிய அண்ணாமலை, அது உணர்வுபூர்வமாக உருவாக்கப்பட்டுள்ளது என்றும் ஒரு குறிப்பிட்ட கலாசாரத்தை அழிப்பதே இனப்படுகொலை எனப்படும் என தெரிவித்திருந்தார். தொடர்ந்து, 'சனாதன தர்மத்தை' ஒழிக்க உதயநிதி யார்? என கேள்வி எழுப்பி, சனாதன தர்மத்தை' ஒழிக்க வேண்டும் என்றால், கோவில்கள் மற்றும் மதச் சடங்குகள் அனைத்தும் அழிந்து விடும் என பேசினார்.
விசிக தலைவர் தொல் திருமாவளவன்
கருத்தியலை, கோட்பாட்டை எதிர்த்து பேசுவது ஒட்டுமொத்த இந்துக்களை எதிர்ப்பது ஆகாது என்றும், உதயநிதியின் பேச்சை அரசியல் ஆதாயத்திற்காக விமர்சிப்பது நல்லதல்ல என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், சனாதனம் சமத்துவத்தை போதிக்கவில்லை என்று கூறிய திருமாவளவன், எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளதால் பாஜகவிற்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் விமர்சித்துள்ளார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை
சனாதனத்தை ஒழித்து விட முடியாது என்றும் சனாதனம் உலகம் முழுவதும் பரவி இருக்கிறது என கூறிய தமிழிசை சௌந்தரராஜன், சனாதன தர்மம் என்பது ஒரு வாழ்வியல் தர்மம் என்றார். மேலும், ஒரு குறிப்பிட்ட மக்கள் பின்பற்றும் தர்மத்தை புண்படுத்துக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.