நடிகைய கூப்பிட்டு..ஜனாதிபதி'ய கூப்பிடலயே அது தான் சனாதனம்..உதயநிதி விமர்சனம்
புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவரை அழைக்காமல், நடிகையை அழைத்துதான் சனாதனம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சனாதன விவகாரம்
சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்துத்துவ பின்னணிகளை கொண்டவர்களும், பாஜகவினரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அதன் நீட்சியாக நாட்டின் பிரதமர் மோடியும் அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இது குறித்து சில கருத்துக்களை தெரிவித்து தனது கண்டனத்தை வெளிப்படுத்தினார். இதன் தொடர்பாக பல்வேறு கட்சி தலைவர்களும் பல்வேறு கருத்துக்களை கூறி வரும் நிலையில், தற்போது மீண்டும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
அது தான் சனாதனம்
மதுரையில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவிற்கு நாட்டின் குடியரசு தலைவரை அழைக்காமல் நடிகை ஒருவரை கூப்பிட்டதே சனாதனம் என விமர்சனம் செய்தார். மலைவாழ் சமூகத்தை சேர்ந்தவர் என்ற காரணத்தினாலும், கணவரை இழந்தவர் என்ற காரணத்தினாலும் தான் திரௌபதி முர்மு புறக்கணிக்கப்பட்டார் என்றும் உதயநிதி குற்றம்சாட்டினார்.
முன்னதாக நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை கூப்பிடாதது பெரும் சர்ச்சைகளையும், நாட்டில் பல இடஙக்ளில் இருந்தும் கண்டனங்களை பெற்றது. இது தொடர்பாக பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்பட்ட போதிலும், தற்போதும் அது விமர்சனத்திற்கு உள்ளன ஒன்றே ஆகும்.