கமலை சீண்டுகிறாரா உதயநிதி ஸ்டாலின் - என்ன சொன்னார் தெரியுமா?
ஆழ்வார்பேட்டையில் குடியிருந்தாலும் தான் எப்போதும் கோபாலபுரத்துக்காரன் என்று நிகழ்ச்சி ஒன்றில் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
நடிகரும், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உதயநிதி 1,200 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "ஆழ்வார்பேட்டையில் இருந்து நான் ஜார்ஜ் கோட்டைக்கு சென்றதாக முன்பு பேசியவர் சொன்னார். அதில் தவறு இருக்கிறது. ஆழ்வார்பேட்டையில் இருந்தவர்கள் அரசியலில் தோல்வியடைந்து இருக்கிறார்கள்.
என்னுடைய வீடு ஆழ்வார்பேட்டையில் இருந்தாலும் தான் பிறந்தது எல்லாமே கோபாலபுரம் தான். தான் எப்போதும் கோபாலபுரத்துக்காரன். கருணாநிதியின் பேரன் என்பதில் பெருமை கொள்வதாக கூறினார். உதயநிதியின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவரது ஆழ்வார்பேட்டையில் இருந்தவர்கள் அரசியலில் தோல்வியடைந்து இருக்கிறார்கள் என்ற கருத்தின் மூலம் கமலை தான் உதயநிதி நேரடியாக விமர்சித்துள்ளதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.