உதயநிதி ஒரு பச்சிளம் குழந்தை - கலாய்த்த அமைச்சர் ஜெயக்குமார்!
பிரச்சாரத்தில் பக்குவமின்றி திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசி வருவதாகவும், அவர் ஒரு பச்சிளம் குழந்தை என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கலாய்த்துள்ளார். தமிழக தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தல் களத்தில் அனைத்து கட்சித் தலைவர்களும் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் சென்னை ராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பாக மீண்டும் அமைச்சர் ஜெயக்குமார் போட்டியிடுகிறார். ராயபுரம், கல்மண்டப சாலை பகுதிகளில் சைக்கிள் ரிக்சாவில் நின்றபடியே வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது - பக்குவப்பட்ட அரசியல்வாதி போல உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கள் இருப்பதில்லை.
பக்குவம் இல்லாமல் பேசி, பச்சிளம் குழந்தை போல் அரசியல் செய்கிறார். இதே போல் திமுகவின் மற்றொரு நட்சத்திர பேச்சாளராக வலம் வரும் ஆர்.எஸ்.பாரதி. அவர் ஒரு உளரல் மன்னன். ஆ.எஸ்.பாரதியால் திமுகவிற்கு பின்னடைவு தான் ஏற்படும். வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைப்பதால்தான் சோதனைகளில் ஈடுபடுகிறார்கள். மடியில் கணம் இருப்பதால் தான் திமுகவினர் பயப்படுகிறார்கள் போல. திமுக ஊழலில் ஊறிப்போன கட்சிதானே.

வருமான வரித்துறையின் சோதனையை எங்கள் மீது திசை திருப்பி, திமுக அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்கிறது. திமுக கருப்பு பணத்தை மட்டுமே நம்பி இருக்கிறது. 100 கோடி ரூபாய் செலவு செய்து ஜனநாயகத்தை பணத்தால் வென்று விட நினைக்கும் திமுகவின் எண்ணம் மக்களிடம் எடுபடாது என்றார்.