சாரி...நான் அப்படி பேசியிருக்கக் கூடாது : மக்களிடம் வருத்தம் தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்
உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு வெற்றியை பரிசளித்த கோவை மக்களுக்கு திமுக இளைஞரணி தலைவரும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
திமுக சார்பில் கோவை நேரு நகர் சுகுணா ஆடிட்டோரியத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் மகளிருக்கு தையல் இயந்திரங்களை சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட திமுக இளைஞரணி தலைவரும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், கோவை மக்களை நம்ப முடியாது, குசும்பு பிடித்தவர்கள் என்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு கூறிச் சென்றேன். அதனை தற்போது நான் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். உள்ளாட்சி தேர்தலில் கோவையில் 100 இடங்களில் 96 இடங்களில் திமுக கூட்டணியினர் வெற்றி பெற்றுள்ளனர்.
எனவே நான் கூறிய வார்த்தைகளை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெறச் செய்தால் அடிக்கடி கோவை வருவேன் என்று கூறியபடி இங்கு வந்துருக்கேன். இந்த வெற்றியை பெற பாடுபட்ட அனைத்து கழக நிர்வாகிகளுக்கும் தோழமைக் கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக அண்ணன் செந்தில் பாலாஜி சொன்னதை 100% செய்துக் காட்டியுள்ளார் என உதயநிதி ஸ்டாலின் கூறினார்.