கோட்சேவின் பேரன்களுக்கு எதிராக பெரியாரின் பேரன்கள் கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து புறப்படுகிறோம் - உதயநிதி ஸ்டாலின்!
திமுக இளைஞரணி மாநில மாநாடு அடுத்த மாதம் 17ம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திமுக கட்சி மேற்கொண்டு வருகிறது. இளைஞரணி மாநில மாநாட்டையொட்டி அக்கட்சி சார்பில் இருசக்கர வாகன பேரணி தொடங்கியுள்ளது.
இருசக்கர வாகன பேரணி
இருசக்கர வாகன பேரணியை திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரியில் இன்று தொடங்கி வைத்தார்.
8 ஆயிரத்து 647 கிலோமீட்டர்கள் தூரம் மொத்தம் 13 நாட்கள் நடைபெறும் இந்த இருசக்கர வாகன பேரணி அடுத்த மாதம் சேலத்தில் நிறைவடைய உள்ளது. இந்த வாகன பேரணி 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வலம் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோட்சேவின் பேரன்களுக்கு எதிராக பெரியாரின் பேரன்கள்
இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், கோட்சே தூக்கிலிடப்பட்ட இந்நாளில், கோட்சேவின் பேரன்களுக்கு எதிராக பெரியாரின் பேரன்கள் கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து புறப்படுகிறோம்!
மாநில உரிமை மீட்புக்கான கழக இளைஞர் அணியின் 2 ஆவது மாநில மாநாடு சேலத்தில் டிசம்பர் 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த முக்கியத்துவமிக்க மாநாட்டின் முழக்கத்தை, தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் சேர்க்கின்ற விதமாக, 188 இரு சக்கர வாகனங்களைக் கொண்ட #DMKriders-ன் வாகனப் பேரணியை கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை எதிரே இன்று தொடங்கி வைத்தோம்.
13 நாட்கள் - 234 தொகுதிகள் - 504 பிரச்சார மையங்கள் - 8,647 கிலோமீட்டர் என லட்சோப லட்ச இளைஞர்களை சந்திக்கவுள்ள இந்த இருசக்கர வாகனப் பேரணி, கழக வரலாற்றில் என்றைக்கும் நிலைத்திருக்கும்.
இந்தப் பயணத்தை மேற்கொள்ளும் கழக இளைஞர் படைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்! பாசிஸ்ட்டுகளை விரட்டி - மாநில உரிமைகள் மீட்க உறுதியேற்போம். என அவர் பதவிட்டுள்ளார்.