இந்தியா - பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்தோம் - ஐக்கிய அரபு எமீரகம் தகவல்

USA India Pakistan UAE
By mohanelango Apr 16, 2021 09:24 AM GMT
Report

இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த சில ஆண்டுகளாக சுமூகமான சூழல் இல்லை. கடந்த 2019-ம் ஆண்டு நிகழ்ந்த புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் முற்றிலுமாக முடங்கியது.

இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதியை கொண்டு வர ரகசியமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இதனை இந்திய அரசு மறுத்து வந்தது. ஆனால் அமெரிக்காவுக்கான ஐக்கிய அரவு எமீரகத்தின் தூதர் இதனை தற்போது உறுதி செய்துள்ளார்.

மேலும் ஐக்கிய அரபு எமீரகம் இந்தியா - பாகிஸ்தான் உறவை சுமூகமான நிலைக்கு கொண்டு வர முயன்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழுவதுமாக கடைபிடிக்கப்போவதாக இரு நாடுகளும் அறிவித்திருந்தன. 

அதனைத் தொடர்ந்து பாகிஸ்தானின் தேசிய தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு இம்ரான் கானும் பதில் கடிதம் எழுதியிருந்தார். இதற்குப் பின் இரு நாடுகளுக்கும் இடையே சுமூகமான சூழல் நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.