நிவர் மற்றும் புரெவி மழை பாதிப்புகளை பார்வையிட மத்திய குழு இன்று தமிழகம் வருகை
தமிழகத்தில் நிவர் மற்றும் புரெவி புயல்களால் பல மாவட்டங்களில் கனமழை பெய்து விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தியது. இதனையடுத்து, மத்திய உள்துறை இணைச் செயலர் அசுதோஷ் அக்னிகோத்ரி தலைமையில், மத்திய எண்ணெய் வித்துக்கள் வளர்ச்சி இயக்குநர் மனோகரன், நிதித்துறை செலவின துணை இயக்குநர் மகேஷ்குமார் ஆகியோரைக் கொண்ட குழுவினர் இன்று தமிழகம் வருகிறார்கள்.
இந்தக்குழு விருதுநகர், தூத்துக்குடியில் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட உள்ளது. பின்னர், இரவு ராமேஸ்வரம் செல்ல உள்ளது. அதனையடுத்து, 5ம் தேதி ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாதிப்புகளை பார்வையிட்டு அதன் பின்னர் சென்னை வர உள்ளது. மற்றொரு குழு திருச்சி வழியாக, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் பகுதிகளை பார்வையிட உள்ளது.
மறுநாள் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் பாதிப்புகளை பார்வையிட்டு சென்னை வர உள்ளது. இதனைத்தொடர்ந்து இரு குழுவினரும் பாதிப்புகள் குறித்து மாநில அதிகாரிகளுடன் சென்னையில் ஆலோசனை நடத்தி உள்ளனர். பிப்ரவரி 6ம் தேதி டெல்லி புறப்பட்டு செல்ல இருக்கிறார்கள்.