விஜய்யின் மதுரை மாநாட்டிற்கு சென்ற இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு
தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டிற்கு சென்ற இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
மதுரையில் நேற்று நடைபெற்ற தமிழக வெற்றி கழக மாநாட்டிற்கு லட்சக்கணக்கில் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் திரண்டனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த இளைஞர்கள் வெயில் கூட பாராமல் விஜயை பார்ப்பதற்காக காலையிலேயே கூடினர்.
மாநாட்டில் விஜயின் ரேம்ப் வாக் முடித்த பிறகு அவர் என்ன பேச போகிறார் என்பதை கூட கேட்காமல் பலரும் அங்கிருந்து உடனடியாக கிளம்பினர்.
இதில் சோகமான விடயம் என்னவென்றால், விஜயின் மாநாட்டிற்கு வந்த நீலகிரியை சேர்ந்த இளைஞரும், சென்னையை சேர்ந்த இளைஞரும் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த பிரபாகரன் (33) என்ற இளைஞர் மதுரை மாநாட்டிற்கு செல்வதற்காக வேனில் சென்று கொண்டிருந்த போது மதுரை சக்கிமங்கலம் அருகே மயங்கி விழுந்தார்.
பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது அவரை சோதனை செய்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக கூறினர்.
அதேபோல, நீலகிரியைச் சேர்ந்த ரித்திக் ரோஷன் (18) என்ற இளைஞரும் மாநாடு முடித்த பின்னர் காரில் சென்ற போது மயக்கம் வந்ததால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.