செங்கல்பட்டில் அரைமணி நேரத்தில் அடுத்தடுத்து 2 பேர் படுகொலை - பீதியில் உறைந்த மக்கள்
செங்கல்பட்டு அருகே அடுத்தடுத்து 2 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள செங்கல்பட்டு நகர காவல்நிலையத்தில் கே.தெரு பகுதியை சேர்ந்த கார்த்திக் என்ற அப்பு கார்த்திக் என்பவர் வழக்கு ஒன்றில் கையெழுத்து போட்டுவிட்டு டீ குடிக்க வந்துள்ளார்.
அப்போது ஒரே இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் கொண்ட கும்பல் கார்த்திக் மீது நாட்டு வெடிகுண்டு வீசியும் கத்தியால் சரமாரியாக வெட்டியும் உரு தெரியாமல் தலையை சிதைத்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த காத்திக் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோல் செங்கல்பட்டு மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் மகேஷ் வீட்டில் டிவி பார்த்து கொண்டிருந்தார். அப்போது கார்த்திகை கொலை செய்து விட்டு தப்பிய அதே கும்பல் அங்கு வந்துள்ளது. மகேஷையும் அந்த கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஒட்டி விட்டது.
படுகாயம் அடைந்த மகேஷ் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இந்த இரண்டு கொலைகள் பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இருவரது உடலையும் மீட்ட செங்கல்பட்டு நகர போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து வழக்கு பதிவு செய்து தப்பியோடிய கும்பல் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு நேரத்தில் அடுத்தடுத்த 2 பேர் படுகொலை செய்யப்பட்டதால் செங்கல்பட்டு மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.