தொடரும் சிறுத்தை தாக்குதல்: 3 வயது குழந்தை உட்பட இருவர் பலி - போராட்டத்தில் குதித்த மக்கள்!
தொடர் சிறுத்தை தாக்குதலால் இருவர் பலியான நிலையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறுத்தை தாக்குதல்
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், கொளப்பள்ளி பகுதிகளில் வனவிலங்கு தாக்குதலால் மக்கள் உயிரிழப்பது வழக்கமாக நடந்து வருகிறது.
இந்த பகுதிகளில் காட்டுயானைகள், கரடிகள், சிறுத்தைகள் நடமாட்டத்தால் மக்கள் பெரும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் வேலைக்காகவும், அத்தியாவசிய தேவைக்காக கூட வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் பெரும் அச்சத்துடனேயே பள்ளி, கல்லூரிக்கு சென்று வருகின்றனர். கடந்த மாதம் கொளப்பள்ளி பகுதியை சேர்ந்த சரிதா என்ற பெண்ணை சிறுத்தை தாக்கியது.
இதில் படுகாயமடைந்த அந்த பெண் கோவையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிசிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், கடந்த 4-ம் தேதி சேரங்கோடு அடுத்துள்ள சேவியர்மட்டம் பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த கிருத்திகா என்ற 4 வயது சிறுமியை சிறுத்தை தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். இதனையடுத்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க தமிழ்நாடு முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் உத்தரவிட்டிருந்தார்.
மக்கள் போராட்டம்
இந்நிலையில் நேற்று மேங்கோரேஞ்ச் பகுதி அங்கன்வாடியில் விளையாடிக்கொண்டிருந்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களான தம்பதியினரின் 3 வயது குழந்தையை சிறுத்தை தாக்கி தேயிலைத் தோட்டத்திற்குள் இழுத்துச் சென்றது.
இதையடுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தையை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கூடலூர், பந்தலூர் , கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, தேவாலா பகுதிகளில் நேற்று மாலை முதல் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தங்களின் உயரிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் சிறுத்தையை சுட்டுக்கொல்ல தமிழக அரசும், வனத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்று மாலை தொடங்கி விடிய விடிய நடைபெற்ற போராட்டம் இன்றும் தொடர்ந்து வருகிறது. இந்த விவகாரத்தில், மக்களின் உயிரைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் தமிழக அரசு மெத்தனமாக செயல்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.