கைதி கொலை வழக்கு : சரக உதவி ஆணையர், தலைமை செயலக காலனி ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்து உத்தரவு!
கடந்த ஏப்ரல் 19-ம் தேதி கஞ்சா வழக்கில் கைதான விக்னேஷ் சந்தேகமான முறையில் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
விசாரணையின்போது விக்னேஷுக்கு வலிப்பு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி விக்னேஷ் உயிரிழந்தார்.
இந்நிலையில், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த விசாரணைக் கைதி விக்னேஷின் உடற்கூராய்வு முடிவில் அவருக்கு உடலில் 13 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.
இந்த வழக்கு தொடர்பாக எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல் நிலைய எழுத்தர் முனாப், காவலர் பவுன்ராஜ் ஏற்கனவே கைதான நிலையில், மேலும் 4 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கைதி விக்னேஷ் கொலை வழக்கில் மேலும் 4 காவலர்கள் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
அதன்படி, தலைமை செயலக காவல் நிலைய தலைமை காவலர் குமார், ஊர்காவல்படை காவலர், ஆயுதப்படை காவலர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
விக்னேஷ் கொலை வழக்கு தொடர்பாக சில வாரங்களுக்கு முன்பு காவலர்களிடம் விசாரணை நடந்த நிலையில், சிபிசிஐடி கைது நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்நிலையில், கைதி விக்னேஷ் கொலை வழக்கில் அயனாவரம் சரக உதவி ஆணையர் சரவணன், தலைமை செயலக காலனி ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சிபிசிஐடி நடத்திய விசாரணையின் பரிந்துரையில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.