கொல்கத்தாவில் ஒரே நாளில் 2 கவுன்சிலர்கள் படுகொலை - அச்சத்தில் பொதுமக்கள்
கொல்கத்தாவில் ஒரே நாளில் 2 கவுன்சிலர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் நிலையில், சமீபத்தில் அங்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று அக்கட்சி அபார வெற்றி பெற்றது. ஆனால் வழக்கம்போல எதிர்க்கட்சிகள் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டி வருகின்றன.

இதனிடையே மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு கவுன்சிலர்கள் நேற்று இருவேறு இடங்களில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அங்கு கலவரம் வெடிக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
கொல்லப்பட்டவர்களில் ஒருவரான வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பானிஹாட்டி நகராட்சியின் திரிணாமுல் கவுன்சிலரான அனுபம் தத்தா, ஒரு கடையில் இருந்து வெளியே வந்து இருசக்கர வாகனத்தில் பின்புறம் அமர்ந்த நிலையில் அவரை நோக்கி வந்த நீல நிற உடை அணிந்த நபர் அனுபம் தத்தாவின் தலையில் சுட்டுவிட்டுத் தப்பி விடுகிறார்.
மற்றொருவர் புருலியா மாவட்டத்தின் ஜல்தா நகராட்சியில் சார்பில் நான்காவது முறையாக கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் தபன் காண்டு ஆவார். இது மாநிலத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளதையே காட்டுவதாக எதிர்க்கட்சி தலைவரான பாஜகவின் சுவேந்து அதிகாரி குற்றஞ்சாட்டி உள்ளார். இதனால் மேற்கு வங்க அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது