ஐபிஎல் தொடரில் மேலும் 2 புது அணிகள் : ஏலத்தில் வென்றது யார் தெரியுமா?
15வது ஐபிஎல் தொடரில் அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய 2 புதிய அணிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் தற்போது, சென்னை, மும்பை, , பெங்களூர், கொல்கத்தா, டெல்லி, ஹைதராபாத், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய 8 அணிகள் இடம்பெற்றுள்ளன. 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஐபிஎல் தொடர் முதல் இந்த 8 அணிகள் தான் விளையாடி வருகின்றன.
இடையில், ராஜஸ்தான் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் இரண்டு வருடங்கள் விளையாட தடை விதிக்கப்பட்டு இருந்த நேரத்தில், தற்காலிகமாக கொச்சி மற்றும் புனே, குஜராத் ஆகிய நகரங்களின் பெயர்களில் இரு அணிகள் செயல்பட்டன. ஆனால் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மீண்டும் ஆடத்தொடங்கியது முதல் அந்த அணிகள் திரும்ப பெறப்பட்டன.
இதனிடையே 15வது ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு நடைபெறும்போது மொத்தம் 10 அணிகள் பங்கேற்க வகை செய்யப்படும் என்று சமீபத்தில் பிசிசிஐ அறிவித்திருந்தது. இதில் ஆடுவதற்காக அகமதாபாத், லக்னோ, கட்டாக் , குவஹாத்தி, ராஞ்சி, தர்மசாலா ஆகிய 6 நகரங்கள் விண்ணப்பம் செய்தன. அணிகளின் அடிப்படை விலையாக ரூ.2 ஆயிரம் கோடி நிர்ணயிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் புதிதாக இரண்டு அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அகமதாபாத், லக்னோ புதிய அணிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. லக்சம்பர்க்கை தலைமையிடமாக கொண்ட சிவிசி நிறுவனம் அகமதாபாத் அணியை ஏலத்தில் எடுத்துள்ளது. ஆர்பிஎஸ்ஜி குழுமம் லக்னோ அணியை ஏலத்தில் எடுத்துள்ளது. இந்த 2 அணிகளும் அடுத்தாண்டு முதல் செயல்பட உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.