பாம்பன் பாலத்தில் கவிழ்ந்த பேருந்தை கயிறு கட்டி காப்பாற்றிய மக்கள்
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டு இருந்தது. அப்போது எதிர் திசையில் சுற்றுலா பயணிகளுடன் வந்த தனியார் பேருந்தும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
2 பேருந்துகள் மோதி விபத்து
ராமேஸ்வரத்தில் உள்ள பிரபலமான பாம்பன் பாலத்தில் தனியார் பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக எதிரே வந்த அரசு பேருந்துடன் நேருக்கு நேர் மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து பாலத்தின் பக்கவாட்டு கட்டையில் பலமாக மோதியது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக அப்பகுதியில் குவிந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பக்கவாட்டு கட்டையில் மோதி கவிழும் நிலையில் இருந்த பேருந்தை கயிறை கட்டி இழுத்தனர்.
அதிகரிக்கும் விபத்து
இந்த விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் பாம்பன் பாலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
25 ஆண்டுகளுக்கு முன்பு பாம்பன் பாலத்தில் ஒரு பஸ் தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு கடலுக்குள் விழுந்து 15 பேர் பலியானார்கள். அதன் பிறகு ஒரு டேங்கர் லாரி கவிழ்ந்து விழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.