அண்ணன் தம்பி இருவரும் ஓட ஓட வெட்டி கொலை - இரவில் நடந்த பயங்கரம்
சென்னையில் அண்ணன் தம்பி இருவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
படுகொலை
சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் ஆயில் சேரி பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன். இவருக்கு ரெட்டைமலை சீனிவாசன்(27), ஸ்டாலின்(24) என இரு மகன்கள் உண்டு.
ரவுடிகளான இருவர் மீதும் காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று(19.01.2025) இரவு இருவரையும் 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்துள்ளது.
3 பேர் கும்பல்
வீட்டில் தனியாக இருந்த இருவரையும், 3 பேர் கும்பல் வீட்டிற்குள் புகுந்து அவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து இருவரும் ஆளுக்கு ஒருபுறமாக தப்பியோடியுள்ளனர்.
அவர்களை தொடர்ந்து விரட்டிய கும்பல், ஸ்டாலினை பட்டாபிராம் எல்லையில் வைத்தும், சீனிவாசனை மாந்தோப்பில் உள்ள புதரில் வைத்து, சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. தகவலறிந்த பட்டாபிராம் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர்.
விசாரணை
இருவரின் சடலங்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
முதற்கட்ட விசாரணையில், சீனிவாசன் மற்றும் ஸ்டாலின் மதுபோதையில் அந்த வழியாக சென்ற கும்பலிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த பகுதி மக்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதன் பின்னர் பழி வாங்கும் நோக்கில், அந்த கும்பல் மீண்டும் வந்து தாக்கியதாக கூறப்படுகிறது.