கும்பகோணத்தில் போலீஸாரின் கையை உடைத்த இரண்டு தவெகவினர் கைது
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே, சாலையின் குறுக்கே பிளக்ஸ் பேனர்கள் வைத்தது குறித்து தட்டிக்கேட்ட காவலரின் கையை உடைத்த தவெக நிர்வாகிகள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நால்ரோடு பகுதியில், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் சாலையின் குறுக்கே தவெக நிர்வாகிகள் பேனர்கள் வைத்திருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற காவலர் தேவேந்திரன், பேனர்களை அகற்ற முயன்றுள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், தவெக வார்டு உறுப்பினர்களான அருண் மற்றும் காளி ஆகியோர் காவலர் தேவேந்திரனை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில், அவரது வலது கையின் மணிக்கட்டு எலும்பு முறிந்துள்ளது. இதுகுறித்து கும்பகோணம் மேற்கு காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வருவதற்குள் அருண் மற்றும் காளி இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், காயமடைந்த தேவேந்திரனை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து, மேல்சிகிச்சைக்காக அவர் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இது குறித்த கும்பகோணம் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சிவகுமார் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகள் இருவரையும் தேடிவந்தனர். தலைமறைவாக இருந்த காளியைக் கைது செய்த நிலையில், மற்றொரு குற்றவாளி அருண் கும்பகோணம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
அதனை தொடர்ந்து இருவரையும் கைது செய்த கும்பகோணம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில், இவர்கள் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.