ட்விட்டர் நிறுவனத்திற்கு எதிரான வழக்கு: உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவு

protest government central framer
By Jon Feb 12, 2021 04:21 PM GMT
Report

ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெறுப்புணர்வை தூண்டும் மற்றும் ஆபாசக் கருத்துக்களை நீக்கவும் இவைகள் இடம்பெறாத வகையில் வழிமுறைகளை உருவாக்க கோரி பாஜகவை சார்ந்த ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் இந்த மனு மீது மத்திய அரசு மற்றும் ட்விட்டர் நிறுவனம் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இதற்கு முன், மத்திய அரசு ட்விட்டர் நிறுவனததிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் ட்விட்டரில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிராக ஆத்திரமூட்டும் ட்வீட்டுகளை வெளியிடும் கணக்குகளை நீக்க மத்திய அரசு ட்விட்டருக்கு அறிவுறுத்தியது.

இதைத்தொடர்ந்து, ட்விட்டர் மத்திய அரசின் வேண்டுகோளின் பேரில் 250 பேரின் ட்விட்டர் கணக்குகள் தற்காலிகமாக நீக்கியது. ஆனால், சிறிது நேரத்தில் அந்த கணக்குகளை ட்விட்டர் மீண்டும் செயல்பட அனுமதித்தது. இதனால், அரசாங்க உத்தரவை பின்பற்றவில்லை என ட்விட்டருக்கு அரசு நோட்டீஸ் அனுப்பியது.

அரசின் உத்தரவை பின்பற்ற மறுத்தால் சட்டரீதியான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிவரும் என மத்திய அரசு கடுமையான எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மத்திய அரசின் அறிவுறுத்தல்கள் சட்டவிரோதமானது என ட்விட்டர் நிறுவனம் பதிலளித்துள்ளது. மேலும் இது தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.