தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளுக்கு ட்விட்டர் நிறுவனம் கட்டுப்பட வேண்டும்: டெல்லி உயர்நீதிமன்றம்
மத்திய அரசின் புதிய தகவல் தொழில் நுட்ப சட்டங்களுக்கு ட்விட்டர் நிறுவனம் கட்டுப்பட வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெல்லி உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள தகவலின் படி, மத்திய அரசு கொண்டு வந்த புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிமுறைகளை பின்பற்ற சமூக வலைதளங்களுக்கு 3 மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டது.
மே 25ம் தேதியுடன் கால அவகாசம் முடிவடைந்த நிலையில் ட்விட்டர் நிறுவனம், புகார் பெறுவதற்கான அதிகாரியை நியமிக்கவில்லை.
இதனிடையே வழக்கறிஞர் அமித் ஆச்சார்யா என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், இது தொடர்பாக ட்விட் மூலம் புகார் கொடுத்தும் பதில் ஏதும் கிடைக்கவில்லை.ஆகவே இனியும் தாமதம் செய்யாமல், உடனடியாக அதிகாரியை நியமிக்க வேண்டும். புதிய விதிமுறைகளை சமூக வலைதள நிறுவனங்கள் பின்பற்றப்படுகிறதா என்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்த மனு, நீதிபதி ரேகா பள்ளி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது டிவிட்டர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், புதிய விதிமுறைகளை நாங்கள் ஏற்பதாகவும், விசாரணை அதிகாரியை நியமித்துள்ளதாக தெரிவித்தார்.
ஆனால், இதனை மறுத்த மத்திய அரசு வழக்கறிஞர், புகாரை பெறுவதற்கான அதிகாரியை டிவிட்டர் நிறுவனம் நியமிக்கவில்லை என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து நீதிபதி கூறுகையில், டிவிட்டர் நிறுவனம் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இல்லாவிடில் தடை விதிக்கலாம் என தெரிவித்ததுடன், இந்த மனு குறித்து பதிலளிக்க மத்திய அரசு மற்றும் டுவிட்டர் நிறுவனத்திற்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.