சொன்னபடி ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார் எலன் மஸ்க் - அடேங்கப்பா இவ்வளவு தொகையா?

Twitter Elon Musk
By Petchi Avudaiappan Apr 25, 2022 10:58 PM GMT
Report

ட்விட்டர் நிறுவனம் 44 பில்லியன் டாலர்களுக்கு எலான் மஸ்க்கிற்கு  விற்பனை செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

சமீபத்தில் ட்விட்டர் வலைதளத்தில் பயனர்களின் கருத்து சுதந்திரம் குறித்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனரான எலான் மஸ்க் கேள்வி எழுப்பியிருந்தார். இதனைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கியிருந்ததால் அவருக்கு  நிர்வாகக் குழுவில் சேருவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

மேலும் ட்விட்டரில் எடிட் பட்டன் குறித்தும் அவர் பேசியிருந்த பின்னரே ட்விட்டர் நிறுவனத்தின் ஒரு பங்கை 54.20 அமெரிக்க டாலர்களுக்கு வாங்க முன்வந்தார். இதுதொடர்பாக கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி ட்விட்டர் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்துக் கொண்ட கூட்டம் நடைபெற்றது. இதில் இரண்டு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதில் முடிவுகள் எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு எலன் மாஸ்க் வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் எப்போது அதிகாரபூர்வமாக தொகை பரிமாற்றம் நடக்கும், மஸ்க் வாங்கிய பிறகு ட்விட்டர் நிறுவனத்தை வழிநடத்த போவது யார் என்பது போன்ற விவரங்கள் வெளியாகவில்லை. ட்விட்டர் நிறுவனத்தை இந்தியரான பராக் அகர்வால் தற்போது வழிநடத்தி வருகிறார்.

இந்த ட்விட்டர் நிறுவன ஒப்பந்தம் உறுதிசெய்யப்பட்டு இருப்பதால் 273 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இதற்கு முன்பு எலெக்ட்ரிக் வாகன தொழிலதிபராகவும், ஸ்பேஸ் எக்ஸ் என்னும் விண்வெளி நிறுவன அதிபராக மட்டுமே அறியப்பட்டு வந்த எலான் மஸ்க் தனது நிறுவனங்கள் பட்டியலில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றையும் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.