நிவின் பாலி பாலியல் வழக்கில் திடீர் திருப்பம் - வெளியான ஹோட்டல் ஆவணம்
நிவின் பாலி மீதான பாலியல் வழக்கில் ஹோட்டல் ஆவணம் வெளியாகி திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
ஹேமா ஆணைய அறிக்கை
மலையாள சினிமா துறையில் உள்ள பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க அமைக்கப்பட்ட ஹேமா ஆணைய அறிக்கை வெளியாகி இந்திய திரையுலகை உலுக்கியுள்ளது.
இதனையடுத்து நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது நடிகைகள் வெளிப்படையாக பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி வருகின்றனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது.
நிவின் பாலி
அந்தவகையில் பிரபல நடிகர் நிவின் பாலி மீதும் பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி வெளிநாட்டில் வைத்து நிவின் பாலி உள்ளிட்ட 6 பேர் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக நேரியமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சிறப்பு புலனாய்வு குழுவிடம் (SIT) புகார் ஒன்றை அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் நிவின் பாலி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து நிவின் பாலி மீதான வழக்கு விசாரணை சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு மாற்றப்பட்டது.
இந்த குற்றச்சாட்டை மறுத்த நிவின் பாலி, "புகார் கூறிய பெண் யாரென்றே எனக்குத் தெரியாது. இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. நான் தவறு செய்யவில்லை என்பதில் 100 சதவிகிதம் உறுதியாக இருக்கிறேன். வழக்கை சட்ட ரீதியாக கையாண்டு உண்மையை நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்வேன்”என கூறினார்.
ஹோட்டல் ஆவணம்
தற்போது வழக்கில் திடீர் திருப்பமாக சில ஆவணங்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி தன்னை நிவின் பாலி பாலியல் வன்கொடுமை செய்ததாகச் பெண் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையிலேயே அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஆனால் டிசம்பர் 14ஆம் தேதி மதியம் முதல் டிசம்பர் 15ஆம் தேதி மாலை வரை நிவின் பாலி கேரள மாநிலம் கொச்சினில் உள்ள ஹோட்டலில் தங்கியுள்ளதற்கான ஆதாரமாக ஹோட்டல் ரசீது வெளியாகியுள்ளது.