மக்களுக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயார் - விஜய் பேச்சு
தமிழக வெற்றி கழக ஆட்சியில் எந்த சமரசமும் இருக்காது என விஜய் பேசியுள்ளார்.
தவெக பூத் கமிட்டி முகவர்கள் கருத்தரங்கு
தமிழக வெற்றி கழகத்தின் முதல் பூத் கமிட்டி முகவர்கள் கருத்தரங்கு, கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நேற்று தொடங்கி இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது.
இந்த கருத்தரங்கில், தவெக தலைவர் விஜய் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
எந்த எல்லைக்கும் செல்லத் தயார்
இன்றைய நிகழ்வில் பேசிய தவெக தலைவர் விஜய், நேற்று பேசும்போது இந்த சந்திப்பு ஓட்டுக்காக நடப்பதல்ல என்று கூறினேன். தவெக அரசியல் ஆதாயத்திற்காக மட்டும் தொடங்கப்பட்ட கட்சி இல்லை.
சமரசம் என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை. மக்களுக்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயார். தவெக ஆட்சி சுத்தமான, ஒரு அரசு இருக்கும். நமது ஆட்சியில் ஊழல் இருக்காது, ஊழல்வாதிகள், மோசடி பேர்வழிகள் இருக்க மாட்டார்கள்.
அதனால் எந்த தயக்கமும் இல்லாமல், தைரியமாக மக்களை சந்தியுங்கள். மக்களை சந்திக்கும் போது, அண்ணா சொன்னதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
அண்ணா சொன்ன வார்த்தைகள்
மக்களிடம் செல், மக்களிடம் இருந்து கற்றுக்கொள், மக்களுடன் வாழ், மக்களுடன் சேர்ந்து திட்டமிட்டு, மக்களை நேசி, மக்களுக்காக சேவை செய். இதை மனதில் வைத்து செயல்பட்டால், சிறுவாணி தண்ணீர் போல் சுத்தமான ஆட்சி அமையும்.
இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால், ஒரு உண்மையான, வெளிப்படையான ஆட்சியாக இருக்கும். பண்டிகையை மக்கள் குடும்பமாக கொண்டாடுவது போல், வாக்குச்சாவடிக்கு மக்கள் ஒரு கொண்டாட்டமாக வாக்களிக்க வர வேண்டும்.
அந்த மனநிலையை, நீங்கள் மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். இந்த வெற்றியை நாம் பெறுவதற்கு உங்கள் செயல்பாடு ரொம்ப ரொம்ப முக்கியம், இந்த வெற்றிக்கு நீங்கள் தான் முதுகெலும்பே. நம்பிக்கையுடன் செயல்படுங்கள். வெற்றி நிச்சயம்" என பேசினார்.