தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கடிதம்
நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நாளை வாக்குப்பதிவு
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.

நேற்று மாலையுடன் பிரச்சாரம் முடிவுக்கு வந்த நிலையில், வாக்குச்சாவடிக்கு வாக்கு இயந்திரங்களை கொண்டு செல்வது, தேர்தல் அலுவலர்கள், பாதுகாப்பு பணியாளர்களை அனுப்புவது உள்ளிட்ட பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
விஜய் கடிதம்
இந்நிலையில் தவெக தலைவர் விஜய், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், "தேர்தல் நாளில் பிரதான சாலைகள் உள்ளிட்ட வழித்தடங்களிலும் காவல் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். அனைத்து ஒருங்கிணைப்பு பிரிவுகளிலும் பறக்கும் படைகளைச் செயல்படுத்த வேண்டும்.
பெண் வாக்காளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் பெண் காவலர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
சிசிடிவி கண்காணிப்பு, ட்ரோன் வரிசைப்படுத்துதல் மற்றும் வீடியோ ஆவணப்படுத்தும் குழுக்கள் மூலம் கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும்.
வயதான வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்குப் போதுமான குடிநீர், இருக்கை, நிழல் வசதிகள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.