தவெக பெண்கள் குறித்த அவதூறு பேச்சு - நேரடியாக டிஜிபி அலுவலகம் விரைந்த விஜய்

Vijay Tamil Nadu Police Women
By Karthikraja Mar 26, 2026 03:56 PM GMT
Report

தவெக பெண்களை அவதூறாக பேசிய பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விஜய் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தவெக பெண்களை அவதூறாக பேசிய பொன்ராஜ்

அப்துல் கலாமின் முன்னாள் உதவியாளரும் அரசியல் விமர்சகருமான பொன்ராஜ் தவெக பெண்களை குறித்து மோசமான வார்த்தைகளில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

தவெக பெண்கள் குறித்த அவதூறு பேச்சு - நேரடியாக டிஜிபி அலுவலகம் விரைந்த விஜய் | Tvk Vijay Directly Complaint On Dgp About Ponraj

அவரின் பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு எழுந்த நிலையிலும் அவர் மன்னிப்பு கேட்க மறுத்து, அவர்களை அப்படி சொல்லாமல் வேறு எப்படி சொல்ல முடியும் என்று கூறினார். 

இதனை கண்டித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், "இந்த மண்ணின் பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய என் அம்மா, அக்கா, தங்கைகளைத் தரக்குறைவான, சொல்லொணா வார்த்தையால் திமுகவின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்திருக்கிறார். 

திமுக தலைமையின் அரவணைப்பிலும் ஆதரவிலும் செயல்படும் இத்தகைய ஆதாய சூதாடிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க. அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

த.வெ.க.வைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிக்கும் இச்செயலால், வருகின்ற தேர்தலில் தாய்க்குலத்தின் ஏகோபித்த முடிவால் தீய சக்தி தி.மு.க. மண்ணைக் கவ்வப் போவது உறுதி உறுதி உறுதி" என தெரிவித்திருந்தார்.

டிஜிபி அலுவலகம் சென்ற விஜய்

இதனையடுத்து சென்னை மைலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் சென்ற விஜய், பொன்ராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஏடிஜிபி (சட்டம் ஒழுங்கு) மகேஸ்வர் தயாளிடம் புகார் மனு அளித்தார். 

தவெக பெண்கள் குறித்த அவதூறு பேச்சு - நேரடியாக டிஜிபி அலுவலகம் விரைந்த விஜய் | Tvk Vijay Directly Complaint On Dgp About Ponraj

விஜயுடன் செங்கோட்டையனும் டிஜிபி அலுவலகம் சென்றிருந்தார். இந்த மனுவில், “ஆளும் தி.மு.க.வின் அதீத ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் திரு.பொன்ராஜ் என்கிற நபர் தமிழகம் முழுவதும் இருக்கும் என் அம்மா. அக்கா, தங்கைகளான ஒட்டுமொத்த தமிழ்நாட்டுப் பெண்கள் இனத்தையே விலைமாதர் என்று அர்த்தம் தொனிக்கும் சொல்லை நேரடியாகவேப் பயன்படுத்தி மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து வருகிறார்.

தமிழ்ப் பண்பாட்டில் பெரும் போற்றுதலுக்கும் மரியாதைக்கும் உரிய தாய்க்குலத் தங்கங்களைத் தரம் தாழ்ந்து விமர்சித்து வரும் திரு.பொன்ராஜ் என்கிற இந்த நபர் ஆளும் கட்சியான திமுக தலைமையின் அரவணைப்பில் இருப்பதால் தன்னை யாராலும் கட்டுப்படுத்த இயலாது என்ற நினைப்பில் எல்லைக் கடந்து அநாகரிகமாகப் பேசி வருகிறார்.

இவ்வாறு நம் தமிழக மகளிரை மிக மோசமாகப் பேசி வரும் இந்த நபர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுத்து பெண்களின் கண்ணியத்தையும் மரியாதையையும் காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.