இலங்கை அரச பயங்கரவாதத்தால் மீனவர்கள் பாதிப்பு! மிரட்டும் திமுக அரசு.. எச்சரிப்பதாக தவெக விஜய்

Vijay Indian fishermen Tamil nadu DMK Thamizhaga Vetri Kazhagam
By Sivaraj Jul 10, 2025 10:28 AM GMT
Report

தவெக என்று குறிப்பிட்டிருந்தால் தமிழக அரசு மீனவர்களுக்கு மானியம் வழங்க மறுப்பதாக கட்சித் தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.  

தமிழக மீனவர்கள் தங்களது படகுகளில் 'தமிழக வெற்றிக் கழகம்' என்று குறிப்பிட்டிருந்தால் அவர்களுக்கு திமுக அரசு மானியம் வழங்க மறுப்பதாக தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எதேச்சதிகாரப் போக்கில் நடந்துகொள்ளும் முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான கபட நாடகத் திமுக அரசுக்குக் கண்டனம்! திருநெல்வேலி மாவட்டம், கூட்டப்புளி மீனவ கிராமத்தைச் சேர்ந்த எங்கள் கழகத் தோழர்கள், தங்களின் வாழ்வாதாரமாய் விளங்கும் மீன்பிடி தொழிலுக்கான தங்களின் படகுகளைத் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயருடன் பயன்படுத்தி வந்துள்ளனர்.

தங்களின் படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரை எழுதியிருந்ததால் அரசு சார்பில் வழங்கப்படக்கூடிய மானியத்தை வழங்க முடியாது என்று, அரசாங்க ஊழியர்கள் படகுகளின் உரிமையாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற எதேச்சதிகார அராஜக ஆட்சியின் வாயிலாகத் தமிழக வெற்றிக் கழகத்தை முடக்க நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது. ஏற்கனவே மீனவப் பெருமக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக உயிரைத் துச்சமென நினைத்துக் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றனர்.

அப்படிச் செல்கையில் அவர்கள் இலங்கை அரச பயங்கரவாதத்தால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். கைது மற்றும் படகுகள் பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளால் அவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்கு உள்ளாகிறது. மிக மோசமான சூழ்நிலையில் வாழ்ந்து வரும் மீன்வர்களுக்கு முழு அளவில் பக்க பலமாக இருக்க வேண்டியது ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் கடமை.

ஆனால், மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வை நோக்கிய, கச்சத்தீவை மீட்பது அல்லது அதைக் குத்தகைக்கு எடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக வெற்றிக் கழகம் உட்பட, பல்வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இருந்தபோதிலும் இதுதொடர்பாக ஒன்றிய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

இந்நிலையில் அவர்கள் தங்கள் சொந்த ஊரிலேயே வாழ்ந்தும் அரசால் புறக்கணிக்கப்படுகிறார்கள். மாநில அரசானது அவர்களை ஏதோ அவர்களுக்கும் அரசுக்கும் தொடர்பில்லாதவர்கள் போல எதேச்சதிகார அரச பயங்கரவாதத்தோடு நடத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

மீனவர்கள் தங்களின் படகுளில் தமிழக வெற்றிக் கழகம் என்று எழுதியிருந்தால், அவர்களுக்கு மானியம் வழங்கக் கூடாது என்று அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டவர் யார்?

படகுகளில் எழுதியுள்ள தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரை அழித்தால்தான் மானியம் வழங்கப்படும் என்று மீனவர்களை மிரட்டும் திமுக அரசு, அதே படகுகளில் திமுக என்ற பெயரையோ அல்லது திமுகவின் கொடியையோ பயன்படுத்துபவர்களிடம் இவ்வாறு கூறுமா?" என தெரிவித்துள்ளார்.