எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த விஜய்
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது.
2024 ஆம் ஆண்டில் கட்சி தொடங்கிய விஜய், முதல் தேர்தலிலே பெருவாரியான வெற்றியை பெற்றது ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
எம்ஜிஆர் சாதனையை முறியடித்த விஜய்
1972 ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கி 1977 ஆம் ஆண்டில் சந்தித்த முதல் தேர்தலில் 33.5% வாக்குகள் பெற்றார்.

தற்போது விஜய் கட்சி தொடங்கிய முதல் தேர்தலிலே 34%க்கும் அதிகமான வாக்குகள் பெற்று அந்த சாதனையை முறியடித்துள்ளார்.
ஆனால் எம்ஜிஆர் கூட 1977 தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பார்வார்ட் பிளாக் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்தே தேர்தலை சந்தித்தார்.
மேலும், 1953 முதல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளில் பயணித்து வந்துள்ளார். அதிமுகவை தொடங்கும் முன்னரே 1962 ஆம் ஆண்டில் எம்எல்சி, 1967 மற்றும் 1971 ல் எம்எல்ஏ ஆக இருந்துள்ளார்.
ஆனால், விஜய் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்காமல் தேர்தலை சந்தித்துள்ளார். கட்சி தொடங்கும் முன்னர் விஜய்க்கு எந்த அரசியல் அனுபவமும் கிடையாது.

கட்சி தொடங்கப்பட்ட பின்னரும், மக்களை சந்திக்கவில்லை, பத்திரிக்கையாளர்களை சந்திக்கவில்லை, போராட்டங்கள் நடத்துவதில்லை, அரசியல் அனுபவமில்லை என விஜய் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார்.
தற்போது வரலாற்று வெற்றி மூலமாக விஜய் அந்த விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார்.