Tuesday, Apr 8, 2025

தேர்தல் நேரத்தில் மட்டும் பேசுகிறார்கள் - திமுக கூட்டணி குறித்து வேல்முருகன் ஆதங்கம்

Tamil nadu DMK Cuddalore
By Karthikraja 4 months ago
Report

அமைச்சர்கள் எங்களிடம் பேசினால் கவுரவ குறைச்சல் ஏற்பட்டுவிடுமா என வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வேல்முருகன்

கடலூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும், பண்ருட்டி சட்டப்பேரவை உறுப்பினருமான வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

tvk velmurugan

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் பேரிடர் ஏற்படும் போதெல்லாம் அதிகம் பாதிக்கப்படுவது கடலூர் தான். அவர்களுக்கு வெறும் ரூ.2000 மட்டுமே நிவாரணம் வழங்கி உள்ளனர். அதுவும் அனைத்து குடும்ப அட்டைதாரகளுக்கு வழங்கப்படவில்லை.

ரூ.2,000 நிவாரணம்

சென்னை வெள்ளம் வந்தால் ரூ.6000 வாங்குகிறீர்கள். வட மாவட்ட மக்கள் மட்டும் ஏமாளிகளா? கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் சட்டமன்ற உறுப்பினராக உள்ளேன். ஒவ்வொரு முறையும் பேரிடரால் பாதிக்கப்படும் மக்களிடமும் ஆறுதல்தான் கூற முடிகிறது. நான் கோரிக்கை தான் வைக்க முடியும். அரசுதான் நடவடிக்கை எடுக்க முடியும்.

துணை முதல்வர் கடலூர் வந்த போது சட்டமன்ற உறுப்பினரான எனக்கு தகவல் அளிக்கப்படவில்லை. இருந்த போதிலும் அவரை சந்தித்து பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட வேண்டுகோள் வைத்தேன். ஆனால் அவர் நேரமில்லை என வந்து பார்வையிடவில்லை.

tvk velmurugan

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.2,000 நிவாரணம் வழங்கி பிச்சையா போடுறீங்க. அரசின் நிர்வாகத் திறன் இன்மையால் மக்கள் உயிர் பலியாகினர். கள்ள சாராயம் குடித்து உயிரிழந்தால் ரூ.10 லட்சம் அரசு வழங்குகிறது. திருவண்ணாமலை நிலச்சரிவில் இறந்தவர்களுக்கு ரூ 5 லட்சம். உயிர் என்பது அனைத்தும் ஒன்று தான் எனவே இதுபோன்ற உயிர் இழந்தால் பாரபட்சம் இல்லாமல் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.

கூட்டணிக் கட்சி

ஆட்சி முடிந்தால் மக்களை சந்திக்க வந்துதான் ஆக வேண்டும். தேர்தலின்போது முதல்வருடன் கூட்டணிக் கட்சித் தலைவர்களை அமர வைப்பவர்கள். தேர்தல் முடிந்தவுடன் ‘ப்ரோடோகால்’ காரணம் காட்டி அனுமதிப்பதில்லை. அமைச்சர்களும் தேர்தல் நேரத்தில்தான் பேசுவார்கள்.

தேர்தல் முடிந்த பிறந்து உதவியாளர்கள்தான் பேசுவார்கள். அமைச்சர்கள் எங்களிடம் பேசினால் கவுரவ குறைச்சல் ஏற்பட்டுவிடுமா? இதற்கெல்லாம் தேர்தல் நேரத்தில் மக்கள் எதிர்வினையாற்றுவார்கள்" என பேசினார்.

2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில், உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் திமுக அரசு மீது குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.