கைதாகும் தவெகவின் முக்கிய நிர்வாகிகள்? நீதிமன்றம் அதிரடி உத்தரவு
தவெகவின் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து கைதாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கரூர் கூட்டநெரிசல் வழக்கு
கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம், இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகிறது.
மேலும் கரூர் மாவட்ட காவல்துறையும் பல்வேறு பிரிவுகளில் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணை குழு(SIT) அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே தவெக மாவட்ட செயலாளர்கள் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆனந்த் சிடிஆர் நிர்மல் குமார் கைது?
மேலும், தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், இணை செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார், பிரச்சார மேலாண்மை பிரிவு செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த், இணை செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் தலைமறைவாக உள்ள நிலையில், முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தனர்.
இந்த மனு இன்று நீதிமன்றத்திற்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நடந்ததை விபத்தாகவே பார்க்க வேண்டும். பொதுச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர் மீது எப்படி வழக்கு பதிவு செய்ய முடியும் என மனுதாரர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக 105 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலுக்கு காரணமானவர் யார் என கண்டறிய விசாரணை அவசியம். அந்த விசாரணை தற்போது தொடக்க நிலையிலேயே உள்ளது. மனுதாரர்கள் இருவருமே அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். எனவே முன்ஜாமீன் வழங்க கூடாது என அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனால், முன்ஜாமீன் வழங்க முடியாது எனக்கூறி, முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் இருவரும் எப்போது வேண்டுமானாலும் கைதாகலாம் என்ற சூழல் உள்ளது.
ஆதவ் அர்ஜுனா கைது?
இதே போல், கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கடந்த 30ம் தேதி தனது எக்ஸ் பக்கத்தில் சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை வெளியிட்டு பின்னர் நீக்கினார்.
அந்த பதிவில், "சாலையில் நடந்து சென்றாலே தடியடி. சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டாலே கைது. இப்படி ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறி போனால் மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சிதான் ஒரே வழி.
எப்படி இலங்கையிலும், நேபாளத்திலும் இளைஞர்களும், ஜென் ஸீ தலைமுறையும் ஒன்றாய் கூடி அதிகாரத்துக்கு எதிரான புரட்சியை உருவாக்கிக் காட்டினார்களோ, அதேபோல இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும்.
அந்த எழுச்சிதான் ஆட்சி மாற்றத்துக்கான அடித்தளமாகவும் அரச பயங்கரவாதத்துக்கான முடிவுரையாகவும் இருக்கபோகிறது. பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.
வன்முறையை தூண்டும் வகையில் பதிவிட்ட ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இது போல பொறுப்பற்ற பதிவுகளை காவல்துறை கவனத்துடன் விசாரித்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறீர்களா? சின்ன வார்த்தை பெரிய பிரச்னையை ஏற்படுத்திவிடும்" எனக்கூறி சட்ட நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளனர்.
இதனால், ஆதவ் அர்ஜுனா மீதும் கைது நடவடிக்கை இருக்கும் என கூறப்படுகிறது.