2026 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியா? தவெக பொதுச்செயலாளர் விளக்கம்

Vijay ADMK Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Nov 18, 2024 06:44 AM GMT
Report

அதிமுகவுடன் தவெக தேர்தல் கூட்டணி அமைக்க உள்ளது என்று வெளியான தகவலுக்கு தவெக பொதுச்செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.

விஜய்

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், கட்சியின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்தினார். கட்சி மாநாட்டில் விஜய் பேசிய பேச்சு தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. 

vijay

அதன்பின் கட்சிக்கு கிளை தொடங்கி மாவட்டம் வரை நிர்வாகிகளை நியமித்து கட்சியை கட்டமைக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார். 

விஜய் போட்டியிட உள்ள தொகுதி இதுதான்; விஜய்யே சொன்னாராம் - தவெக நிர்வாகி தகவல்

விஜய் போட்டியிட உள்ள தொகுதி இதுதான்; விஜய்யே சொன்னாராம் - தவெக நிர்வாகி தகவல்

2026 கூட்டணி

அதன்பின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊழலை மையமாக வைத்தே விஜய் பிரச்சாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக எந்த கட்சியுடன் கூட்டணியில் இணையும், விஜய் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தருமபுரி மாவட்டத்தில் போட்டியிடுவார் என அக்கட்சியின் நிர்வாகி பேசியுள்ளார். 

tvk vijay

மேலும் மாநாட்டில் விஜய் திமுக மற்றும் பாஜகவை மறைமுகமாக விமர்சித்து தனது அரசியல் எதிரியாக அறிவித்திருந்தார். அதே வேளையில் தமிழகத்தின் மற்றொரு பிரதான கட்சியான அதிமுக குறித்து எதுவும் பேசவில்லை.

ஆதாரமற்ற தகவல்

எனவே விஜய் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பார் என தகவல் வெளியானது. இந்நிலையில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் இதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கழகத்தின் கொள்கைகள், கொள்கை எதிரி, அரசியல் எதிரி, தேர்தல் நிலைப்பாடு குறித்தும் தமது உரையில் கழகத் தலைவர் அவர்கள் தெளிவாக, விளக்கமாக எடுத்துரைத்துள்ளார்.

கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழக வெற்றிக் கழகம், வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று ஆட்சி் அமைப்பதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்து, தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது. 

vijay bussy anand

இச்சூழலில், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆடசி மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியாக, ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஏகோபித்த வரவேற்பையும் ஆதரவையும் பெற்று, மக்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் அடைந்து வரும் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டு அஇஅதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்று தொடர்புப்படுத்தி, பிரதான தமிழ் நாளிதழ் ஒன்று உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவல்களைக் கொண்டு நேற்றுத் தலைப்புச் செய்தி் வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி, முற்றிலும் தவறானது. ஆதாரமோ அடிப்படையோ அற்றது.

பெரும்பான்மையுடன் ஆட்சி

ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக அரசியல் விமர்சகர்கள் என்கிற போர்வையில் உள்நோக்கத்தோடு, தான்தோன்றித்தனமாகச் சிலர் தெரிவிக்கும் பொய்யான கருத்துகளின் அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடர்புப்படுத்திப் பரப்பப்படும் இது போன்ற உண்மைக்கு மாறான பொய்ச்செய்திகளைத் தமிழக மக்கள் புறக்கணித்து விடுவார்கள் என்பதை இத்தகையப் பொய்யானச் செய்திகளை உள்நோக்கத்தோடு பரப்புபவர்களுக்கு நினைவூட்டுகிறேன்.

தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பாதை, முழுக்க முழுக்கத் தமிழக மக்களின் நலனுக்கானது. வெற்றிக் கொள்கைத் திருவிழாவில் கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரையில் தெரிவித்த நிலைப்பாட்டின் அடிப்படையில் பெரும்பான்மை பலத்தோடு நாட்டு மக்களின் பேராதரவோடு வென்று தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கான நல்லரசை அமைப்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் குறிக்கோள்.

எனவே, மக்களைக் குழப்பும் நோக்கில் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான கருத்துகளைச் செய்திகளாக வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.