அருள் விக்னேஷ் மீதான வழக்கை ஐ.ஜி. கண்காணிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு
இந்த விவகாரம் தொடர்பாக, அதிமுகவைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஆர். த்ரிசூலி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பப்பட்டதாக வெளியான தகவல்கள் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி. லட்சுமி நாராயணன், ஆட்சியரிடம் புகார் பெறப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரித்து தெரிவிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, ஆட்சியரின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. மேலும், முதல் தகவல் அறிக்கையையும் தாக்கல் செய்தது. விசாரணையின்போது, பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தொடர்பான புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நீதிபதி வலியுறுத்தினார்.
விசாரணையை ஐ.ஜி. கண்காணிக்க உத்தரவு
மேலும், இந்த வழக்கின் விசாரணையை கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. மேற்கொண்டாலும், அதை ஐ.ஜி. அந்தஸ்திலான அதிகாரி ஒருவர் கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் விசாரணை முன்னேற்றம் குறித்து நவம்பர் 27ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும், முழுமையான விசாரணை அறிக்கையை டிசம்பர் 22ஆம் தேதி சமர்ப்பிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், இந்த விவகாரத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என்றும் தெரிவித்தார். இந்நிலையில், தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (BNS 75), தவறான நோக்கத்துடன் ஒருவரைப் பின்தொடர்தல் (BNS 78(2)) உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் கள்ளக்குறிச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.