அந்த பெண் நானில்லை! அமைச்சர் கீர்த்தனா விளக்கம்
கடந்த சில நாட்களாக காரில் இருந்து பெண் ஒருவர் இறங்குவது போன்ற வீடியோ வைரலான நிலையில் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் அமைச்சர் கீர்த்தனா.
இதுதொடர்பில் அவரது எக்ஸ் தள பதிவில், ஒரு பெண் தன் அன்றாட வேலையை பார்த்துக்கொண்டு இயல்பாக செல்லும் வீடியோ ஒன்று.. இந்த அளவிற்கு கொந்தளிப்பை ஏற்படுத்தும் போது அதன் பின்னணியில் உள்ள பலவீனமான பிற்போக்குத்தனமான மனநிலையை தெளிவாக காட்டுகிறது.
ஆனால் எனக்கு இதில் ஆச்சரியம் எதுவும் இல்லை! பெண்களுக்கு எதிராக தொடர்ச்சியாக மிகவும் இழிவான கருத்துகளை தெரிவிக்கும் பின்னணி கொண்ட ஒரு தலைவரின் ஆதரவாளர்களிடம் இருந்து இதை தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

தெளிவுபடுத்துவதற்காக கூறுகிறேன். அந்த வீடியோவில் இருக்கும் பெண் நான் இல்லை. ஒருவேளை அது நானாகவே இருந்தாலும் அதில் என்ன பிரச்சனை இருக்கப்போகிறது?
ஒரு பெண்ணின் உடை, அவரது தோற்றம் அல்லது அவரது மகிழ்ச்சி ஆகியவை ஏன் இன்னும் பொதுவெளியில் விமர்சனத்திற்குரிய விஷயங்களாக நடத்தப்படுகின்றன?
எங்களது கொள்கைள், ஆட்சிமுறை அல்லது சாதனைகள் குறித்து எங்களை அவர்களால் எதிர்கொள்ள முடியாத போது, தலைவர்கள் மற்றும் அவர் தம் குடும்பத்தினரின் தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து போலிக் கதைகளை உருவாக்கத் தொடங்குகிறார்கள்.
நேர்மறையாக பங்களிக்க எந்தவொரு விஷயமும் இல்லாதவர்கள் கையாளும் மிகப்பழமையான ஆயுதமே பெண்களுக்கெதிரான வெறுப்புணர்வுதான் என்று பதிவிட்டிருக்கிறார்.
