த.வெ.க. தலைவர் விஜய் ராணுவ வீரர்களுடன் திடீர் சந்திப்பு - பின்னணி என்ன?
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ராணுவ வீரர்களைச் சந்திப்பு பேசியுள்ளார்.
விஜய்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். அப்போது 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு எனக் கூறப்பட்டது.
இதனை தொடர்ந்து சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் ஆகஸ்டு 21 ஆம் தேதி கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தி, கொடி பாடலையும் த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்டார். இதனையடுத்து தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு கடந்த மாதம் 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்றது.
இதில் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் தவெக கட்சிக் கொள்கை வெளியிடப்பட்டது. அதன்பிறகு விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
ராணுவ வீரர்கள்
மாநாட்டைத் தொடர்ந்து 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக வெற்றிக்கழகம் கட்சி பனிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், த.வெ.க. தலைவர் விஜய் ராணுவ வீரர்களுடன் திடீர் சந்திப்பு நடத்தியுள்ளார்.
சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி பள்ளிக்கு நேரில் சென்ற விஜய், அங்குள்ள ராணுவ வீரர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். மேலும் ராணுவ வீரர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்தார். இந்நிகழ்வில் இயக்குநர் வினோத் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.