இருமொழிக் கொள்கையே தமிழகத்தில் பின்பற்றப்படும் - திருத்தமின்றி உரையை வாசித்த ஆளுநர்

Vijay Governor of Tamil Nadu TN Assembly Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Jun 18, 2026 06:19 AM GMT
Report

தவெக அரசின் முதல் சட்டமன்ற கூட்டதொடரில் ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் உரையை எந்தவித திருத்தமுமின்றி 39 நிமிடங்களுக்கு வாசித்தார்.

தவெக அரசின் முதல் சட்டமன்ற கூட்டதொடரில் ஆளுநர் உரை

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக அரசின் முதல் சட்டமன்ற கூட்டதொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

இன்று தொடங்கிய சட்டமன்ற கூட்டதொடரில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு, 2வதாக மரபுக்கு மாறாக ஆளுநர் உரைக்கு முன்பாகவே தேசிய கீதம் பாடப்பட்டது. 

இருமொழிக் கொள்கையே தமிழகத்தில் பின்பற்றப்படும் - திருத்தமின்றி உரையை வாசித்த ஆளுநர் | Tvk Govt 1St Assembly Session With Governor Speech

இதைத்தொடர்ந்து ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் வணக்கம் என தமிழில் கூறி உரையை தொடங்கினார்.

இதில் பேசிய அவர், "தமிழக வெற்றிக் கழகம் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், காமராஜர், ராணி வேலுநாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் வழியில் இந்த அரசு செயல்படும்.

1967 அண்ணா, 1977 எம்.ஜி.ஆருக்கு பின்னர் 2026 ஆம் ஆண்டு தமிழக அரசியலில் வரலாற்றுப் புரட்சி நடந்துள்ளது. கூட்டணி ஆட்சி தத்துவத்தின் இலக்கணமாக திகழும் இந்த அரசு, கடந்த 74 ஆண்டு காலமாக தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் கண்டிராத, ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதை செய்து காட்டியுள்ளது.

தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய பல்வேறு நிதி தொடர்பாக ஒன்றிய அரசிடம் முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார். மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும். ஒன்றிய அரசு இதை பரிசீலனை செய்து அனுமதி அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க இந்த அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. பல்வேறு நிதி நெருக்கடிக்கு இடையிலும் சிங்கப்பெண் அதிரடிப் படை உள்ளிட்ட திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி உள்ளது.

தமிழக வெற்றிக் கழக அரசு இரு மொழிக் கொள்கையை தொடர்ந்து நடைமுறைப்படுத்தும்.. பின்பற்றும்.. இந்த அரசு தேசிய கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்க்கிறது.

மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தினால்தான் நிதி விடுவிக்கப்படும் என்பதை ஒன்றிய அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும். தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும். கல்வி பொதுப்பட்டியலில் உள்ளதால் புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் மும்மொழி கொள்கையை திணிக்க முயற்சி. 

இருமொழிக் கொள்கையே தமிழகத்தில் பின்பற்றப்படும் - திருத்தமின்றி உரையை வாசித்த ஆளுநர் | Tvk Govt 1St Assembly Session With Governor Speech

மாநில உரிமை, பெண்கள் பாதுகாப்பு, நலன், சமூகநீதி, சமவாய்ப்பு ஆகியவை தவெக அரசின் அடிப்படை கொள்கைகள். போதைப்பொருளை தடுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு படை அமைக்கப்படும்.

முந்தைய அரசின் தொழில் கொள்கைகளை தொடர்வதுடன், புதிய தொழில் கொள்கையை தமிழக வெற்றிக் கழக அரசு வெளியிட உள்ளது. தலைமைச் செயலாளர் தலைமையில் தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் அமைக்கப்படும்.

ரூ.200 கோடிக்கு மேல் முதலீடு செய்யும் அல்லது 5,000 பேருக்கு மேல் வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களுக்கு விரைவு அனுமதி வழங்கப்படும்.

வெற்றித்தமிழகம் எனும் தொலைநோக்குத் திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வகுக்கப்பட்டுள்ளது. முதியோர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கி வரும் சலுகைகள் தொடரும். விளையாட்டு வீரர்களுக்கு உலகத்தரத்தில் பயிற்சி வழங்கப்படும்.

கர்நாடகா அரசு மேகதாது அணை கட்டுவதைத் தடுக்க தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும். தமிழ்நாட்டில் உள்ள நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்ட விரோத கனிமவள கொள்ளையைத் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு சம உரிமையை வழங்குவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது

. தமிழ்நாடு அரசின் தேர்வு முகமைகள் மூலம் வெளிப்படைத் தன்மையுடன் தேர்வுகள் நடத்தப்பட்டு இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். உலகத் தரத்திலான பயிற்சிகளை அளிக்க ஒலிம்பிக் மையங்கள் அமைக்கப்படும்.

இந்து சமய அறநிலையத் துறை முழுமையாக சீரமைக்கப்படும். கோயில் நிதி கோயில்களுக்கு மட்டுமே செலவு செய்யப்படும்.

பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், மீனவர்கள், சுற்றுசூழல், உலகத்தர கட்டமைப்பு, மக்களுக்கான ஊழலற்ற அரசாக தவெக அரசு செயல்படும். இந்த அரசால் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு வாக்குறுதியும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும்" என பேசியுள்ளார்.

அதன் பின்னர் சட்டமன்ற சபாநாயர் ஜேசிடி பிரபாகர் உரையாற்றி விட்டு, அவை முடியும் முன்னர் மீண்டும் ஒருமுறை தேசிய கீதம் பாடப்பட்டது.

கடந்த திமுக ஆட்சியில் 4 ஆண்டுகளாக ஆளுநர் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி பல்வேறு திருத்தங்களுடன் வாசித்ததோடு, உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்தார்.

இன்று ஆளுநர் உரையை வாசித்த ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் எந்த திருத்தமுமின்றி ஆளுநர் உரையை 39 நிமிடங்களுக்கு வாசித்தார்.