தீபத்தூண் விவகாரம்: அரசு உத்தரவை முறையாக நடைமுறைப்படுத்தும் - நாஞ்சில் சம்பத்
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவைத் தமிழக அரசு முறையாக நடைமுறைப்படுத்தும் என தவெக கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில், கோயில் சார்பில் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே தீபம் ஏற்ற வேண்டும் என்றும், முழக்கங்கள் உள்ளிட்ட செயல்களில்ஈடுபடக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.

தவெக சார்பில் உறுதி
இதுகுறித்து பிரபல தொலைக்காட்சியொன்றுக்கு அளித்த பேட்டியில் பேசிய நாஞ்சில் சம்பத், உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தாங்கள் கொள்கை ரீதியாக வரவேற்கவில்லை என்றாலும், நாட்டின் சட்டத்தை மதித்து தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும், முருகன் பெயரைப் பயன்படுத்தி தமிழகத்தில் மதக் கலவரத்தை ஏற்படுத்த சிலர் முயற்சித்ததாகவும், முருகன் மாநாட்டில் மதம் சார்ந்த முழக்கங்களே முன்னிலைப்படுத்தப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.தவெகவை போலி மதச்சார்பின்மை கொண்ட கட்சி என பாஜக தலைவர்கள் விமர்சிப்பதையும் அவர் ஏற்கவில்லை.

இறுதியாக, சட்டம் – ஒழுங்குப் பிரச்சினை ஏற்படாத வகையில் தமிழக அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து, தீபத்தூணில் தீபம் ஏற்றும் நடவடிக்கையைச் சிறப்பாகச் செயல்படுத்தும் என தவெக சார்பில் உறுதியளிப்பதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.