தேர்தல் ரிசல்ட் நாளில் தவெக தலைவர் விஜய் நிலவுக்கு செல்ல உள்ளார்- ஆதவ் அர்ஜுனா பதிலடி
தவெக கட்சி தலைவர் விஜய் ஆஸ்திரேலியா செல்லவில்லை. நிலவுக்கு செல்ல உள்ளார். திமுக தான் அதற்கான ராக்கெட்டை தயார் செய்து வருகிறது என விஜய் குறித்து வெளியாக வதந்திக்கு ஆதவ் அர்ஜுனா பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் திகதி வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை மே 04ஆம் திகதி நடைபெற்று, அதே நாளில் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும்.

அதே நாளில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனா சென்னையில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இது குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறிகையில், திமுக ஓட்டுக்காக ரூ.5,000 பணம் வழங்கியுள்ளது. மக்கள் அதை தூக்கி எறிந்து மாற்றத்திற்கு தயாராகிவிட்டனர். அதேசமயம், தவெகவில் ஓட்டுக்கு பணம் என்ற எந்த செயலிலும் ஈடுபடவில்லை. மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை மட்டுமே விஜய் சிந்திப்பதாகவும் கூறியிருக்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் ரிசல்ட் நாளில் தவெக தலைவர் விஜய் ஆஸ்திரேலியா செல்ல உள்ளதாக பரவி வரும் தகவலுக்கு விளக்கம் அளித்தார்.
அதாவது, விஜய் ஆஸ்திரேலியா செல்லவில்லை. நிலவுக்கு செல்ல உள்ளார். திமுக தான் அதற்கான ராக்கெட்டை தயார் செய்து வருகிறது என்று கிண்டலாக பதிலளித்துள்ளார்.
மேலும், வதந்திகளுக்கு எல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க வேண்டாம். திமுக ஆட்சியில் இருக்கும்போது தான் வதந்திகளை பரப்பிக் கொண்டிருந்தனர். அதுதான் திமுக ஆட்சி முடிந்துவிட்டதே என குறிப்பிட்டுள்ளார்.